கோலாலம்பூர், மார்ச் 11 - அமெரிக்க, இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் பதற்றத்தை தொடர்ந்து சுற்றுலாத் துறையும் அதை உட்படுத்திய நிறுவனங்களும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதோடு நூற்றுக்கணக்கான பயணிகள் கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
விமானப் பயணங்களை உட்படுத்திய இதுபோன்ற பிரச்சனைகளைக் கையாள்வதற்கு தகுந்த நடவடிக்கைகள் இருந்தாலும் பதற்றத்தின் காரணமாக பல பயணிகள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி வருவதாக MITEA (மைட்டி) எனப்படும் மலேசிய இந்திய சுற்றுலாத்துறை தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வன் திருமலை கூறினார்.
"எந்த விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டாலும் சம்பந்தப்பட்ட அந்த விமான நிறுவனத்தையே முதலில் தொடர்பு கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாக அவர்களால் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும். அதையடுத்து இரண்டாவதாக அங்குள்ள தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். மூன்றாவது வெளியுறவு அமைச்சை சேர்ந்தவர்களிடம் தகவல் கூற வேண்டும்," என்றார் அவர்.
இவ்வாறான வழிகளை பயணிகள் பின்பற்றினால் மட்டுமே அவர்களுக்குரிய தீர்வு கிடைக்கும் என்றும் எவ்வித தடைகளும் இன்றி சுமூகமான முறையில் அவர்கள் தங்களின் தாயகம் திரும்ப முடியும் என்றும் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
விமான நிலையத்திற்கு வந்த பின்னர் மட்டுமின்றி, விமான நிலையத்திற்கு வரும் வழியிலும் இதே பிரச்சனையை பயணிகள் எதிர்நோக்க நேர்ந்தால், அப்போதும் இத்தகைய வழிமுறையைப் பின்பற்றலாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.
"ஒருவேளை பயண நிறுவனங்கள் மூலமாக செல்ல நேரிட்டால், அவர்கள் அங்குள்ள பயண நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும். ஏனெனில் அதற்கான பொறுப்பினை அத்தரப்பினரே கொண்டுள்ளனர்," என்று அவர் விளக்கினார்.
இதுவே தனிப்பட்ட முறையில் இல்லாமல் பயண நிறுவனங்கள் மூலமாக பதிவு செய்திருந்தால் அத்தரப்பினர் மூலமாக பயண நிலவரம், பயண ரத்து, செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட போக்குவரத்து அட்டவணையையும் முறையாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுமாறும் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழ்நிலையில் விமானப் பயணம் மேற்கொள்வோர், தங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு, போக்குவரத்து ஆலோசனையின் அண்மைய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்வதே விவேகமானது என்று பெர்னாமா செய்திகளிடம் தமிழ்செல்வன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)