புத்ராஜெயா , மார்ச் 11 - மேற்கு ஆசியாவில் பதட்டங்களைத் தொடர்ந்து, உலக எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தபோதிலும், RON95 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென்னாக நிலைநிறுத்தப்படுகிறது.
அண்டை நாடுகள் உட்பட பெரும்பாலான பிற நாடுகள் எரிபொருள் விலையை உயர்த்தி இருந்தாலும் இம்முடிவு ஒரு கடினமான நடவடிக்கையாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்துரைத்தார்.
"மலேசியாவில் எண்ணெய் விநியோகத்தின் பாதுகாப்பு இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது. நாங்கள் மிகவும் பெருமையான சூழ்நிலையில் இருக்கிறோம். கடவுளுக்கு நன்றி. ஏனென்றால், குறிப்பாக பெட்ரோனாஸுடன் நாங்கள் சரிபார்க்கும்போது, குறைந்தபட்சம் 2026 மே வரை நம்மிடம் போதுமான பெட்ரோலிய பொருட்கள் உள்ளன. இது நிச்சயமாக மற்ற பெரும்பாலான நாடுகளின் நிலைமையிலிருந்து வேறுபட்டது," என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.
தற்போது, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக ஹர்மொஸ் நீரிணையில் 400-க்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் சிக்கித் தவிப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 9-ஆம் தேதி பிரேன்ட் எண்ணெயின் விலை பீப்பாய்க்கு சுமார் 119 அமெரிக்க டாலரை எட்டியிருந்தது.
பின்னர், நேற்று பீப்பாய்க்கு சுமார் 90 அமெரிக்க டாலராக அது குறைந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)