பொது

ஜோகூர் பாருவில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறப்புத் திட்டம், நோன்புப் பெருநாளுக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் - ஓன் ஹஃபிஸ்

11/03/2026 07:48 PM


ஜோகூர் பாரு, 11 மார்ச் (பெர்னாமா) -- ஜோகூர் பாரு மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான முறைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு அறிக்கையை மாநில அரசாங்கம், நோன்புப் பெருநாளுக்கு பின்னர் சமர்ப்பிக்கும்.

பல நிலை தானியங்கி போக்குவரத்து அமைப்பு, ART மேம்பாடு உட்பட மாநில அரசாங்கத்தின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை தாமே நேரடியாக தாக்கல் செய்யவிருப்பதாக ஜோகூர் மந்திரி புசார், டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.

2024-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ART-இன் மேம்பாட்டிற்கான பரிந்துரைக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்  மற்றும் இடைக்கால ஜோகூர் சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயிலின் ஒப்புதலைப் பெற்றதாக அவர் கூறினார்.

அதோடு, இத்திட்டத்தின் பரிந்துரை போக்குவரத்து அமைச்சிடம் கொண்டுச் செல்லப்பட்டு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் விவாதிக்கப்பட்டுள்ளதாக ஓன் ஹஃபிஸ் விவரித்தார்.

"இந்த திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று நம்புகிறேன்," என்று அண்மையில், ஜோகூர் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லமான சௌஜானாவில், பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ்-சின் தலைமையில் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலின்போது, ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார்.

ART திட்டத்திற்கான ஒப்புதல் விவாதத்தில் இருப்பதாகவும், அதை செயல்படுத்துவது தொடர்பான விவரங்கள் விரைவில் இறுதி செய்யப்படும் என்று கடந்த டிசம்பரில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் இணைப்பு விரைவு போக்குவரத்து அமைப்பு (RTS) திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகள் குறித்தும், இன்னும் செயல்படுத்தப்படாத ART திட்டம் குறித்தும் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் வருத்தம் தெரிவித்தார்.

ஜோகூர் பாருவில் பரிந்துரைக்கப்பட்ட ART திட்டம், 50 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்துடன் 32 நிலையங்களைக் கொண்டிருப்பதோடு, ஏறக்குறைய 700 கோடி ரிங்கிட் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெப்ராவ், ஸ்கூடாய் மற்றும் இஸ்கண்டர் புத்ரி என மூன்று முக்கிய சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

ஜோகூர் பாருவிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களில் ஏறக்குறைய 75 விழுக்காட்டு வாகனங்கள் இப்பாதை வழியாகச் செல்வதால், தெப்ராவ் சாலை சீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பிற முயற்சிகளில் பேருந்து சேவையை அதிகரிப்பது, இ-ஹெலிங் சேவையின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதும் அடங்கும் என்றும் ஓன் ஹஃபிஸ் கூறினார்.

பயணிகள் ரயில் சேவை மற்றும் மின்சார ரயில் சேவை, ETS உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் மாநில அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை