ஜோகூர் பாரு, 11 மார்ச் (பெர்னாமா) -- ஒரு தொழில்துறையின் முன்னனி நிறுவனம் அல்லது ‘queen bee’ எனப்படும் முக்கிய நிறுவனத்தின் வருகையின் மூலம் மேம்படுத்தப்பட்ட மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறையில் ஒரு புதிய சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சியின் தூணாக ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் JS-SEZ விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறையின் முழு சுற்றுச்சூழல் அமைப்பின் சங்கிலியை ‘queen bee’ திட்டம் ஒன்றிணைக்கும் என்று ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி கூறினார்.
இதனால், அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகுவதோடு, தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பின் சங்கிலியும் வலுப்பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அண்மையில், ஜோகூர் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், பெர்னாமாவின் தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜு துரை ராஜ் உடனான நேர்காணலின் போது டத்தோ ஓன் ஹஃபிஸ் அதனை கூறினார்.
மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறையில் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை மாத ஊதியம் வழங்கும் நிறுவனங்கள் உள்ளதோடு, அவை திறமையான தொழிலாளர்களுக்கான அதிக தேவையைப் பிரதிபலிப்பதாக, அவர் விவரித்தார்.
சம்பந்தப்பட்ட துறையில் வேலைகள் அதிக அளவிலான உற்பத்தி திறனை எதிர்பார்த்தாலும், அதன் மூலம் அதிக அளவிலான மாத ஊதியம் வழங்கப்படுவதால் தொழிலாளர்கள் திருப்தி அடைவதாக, டத்தோ ஓன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும், இது உள்ளூர் பணியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளை வழங்குவதாகவும் அவர் விளக்கினார்.
இதனிடையே, கடந்தாண்டு ஜனவரி மாதம் கையெழுத்திடப்பட்ட JS-SEZ ஒப்பந்தம், 357,128 ஹெக்டர் நிலப்பரப்பில் இஸ்கண்டார் கட்டிடம், Forest City, பெங்கராங் ஒருங்கிணைந்த பெட்ரோலிய வளாகம் மற்றும் டெசாரு ஆகிய மேம்பாட்டு பகுதிகளை உள்ளடக்கி இருப்பதாக, ஓன் ஹஃபிஸ் கூறினார்.
மற்றொரு நிலவரத்தில், உற்பத்தி, சுற்றுலா, தரவு மையம் மற்றும் மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறைகளை உள்ளடக்கிய JS-SEZ-இல் முதலீடு செய்ய தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாரணைகளை, ஜோகூர் மலேசிய முதலீட்டு வசதி மையம், ஐ.எம்.எஃப்.சி-ஜே பெற்றுள்ளதாகவும், ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார்.
தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், திறமையான மனிதவளத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மாநில அரசாங்கத்தின் தற்போதைய முன்னுரிமையாக உள்ளதாகவும், குறிப்பாக, ஜே.தி.டி.சி எனப்படும் ஜோகூர் திறமை மேம்பாட்டு மன்றம் அறிமுகப்படுத்துவது உட்பட இளைஞர்களுக்கான கூடுதல் திறன்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதும் அதில் அடங்கும் என்று அவர் விவரித்தார்.
இதனிடையே, மாநிலத்தின் கல்வி துறையை வலுப்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்ட பிற முயற்சிகளில், ஜோகூர் பங்சா ரிந்திஸ் பள்ளியைச் செயல்படுத்துவது, உயர்கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பது மற்றும் ஜோகூரில் உள்ள தொழிற்கல்வி கல்லூரிகளை மேம்படுத்துதல் ஆகியவையும் அடங்கும் என்று, அந்த நேர்காணலின் போது டத்தோ ஓன் கூறினார்.
2025-ஆம் ஆண்டில், ஜோகூர் மாநிலம் 11 ஆயிரம் கோடி ரிங்கிட் மலேசியாவில் அதிகபட்சமாக அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளை பதிவுச் செய்துள்ளதாக, அவர் கூறினார்.
அது, இதுவரை எந்த மாநிலமும் எட்டிய மிக உயர்ந்த சாதனை என்று டத்தோ ஓன் நெகிழ்ச்சி தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)