புத்ராஜெயா, மார்ச் 12 (பெர்னாமா) -- BUDI95 எனப்படும் BUDI மடானி ரோன்95 திட்டத்தின் கீழ், ரோன் 95 பெட்ரோல் உதவித் தொகையை மக்கள் முழுமையாக அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக, உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அதன் அமலாக்கத்தை கடுமையாக்கியுள்ளது.
பெட்ரோல் உதவித் தொகையில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால் அதைக் கண்டறிந்து கட்டுப்படுத்த, புலனாய்வு அடிப்படையிலான அமலாக்க அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் அமலாக்க பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல்களினால் உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்திருப்பதாக, அண்மையில் பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அஸ்மான் அடாம் கூறினார்.
ஆகவே, கசிவைத் தடுக்கவும் புதிய நடைமுறைகளைக் கட்டுப்படுத்தவும், குறிப்பாக நாட்டின் எல்லைப் பகுதிகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் அமலாக்கத்தை வலுப்படுத்த அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் விவரித்தார்.
"புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் எங்கள் அமலாக்கத்தை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவோம். எல்லைப் பகுதிகளிலும், பெட்ரோல் நிலையங்களிலும் எங்கள் கட்டுப்பாடுகளை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம். மக்களுக்கு ஒதுக்கப்படும் உதவித் தொகையில் எந்தவிதமான கசிவு அல்லது துஷ்பிரயோகம் இல்லாமல் உண்மையிலேயே அவர்கள் அனுபவிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பையும் நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம்ச்" என்றார் அவர்.
பெட்ரோல் உதவித் தொகையில் முறைகேடுகள் ஏற்படாமல் தடுத்த அரச மலேசிய போலீஸ் படை, அரச மலேசிய சுங்கத் துறை மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்கள் உட்பட பல்வேறு அமலாக்க நிறுவனங்களுடன் கே.பி.டி.என். வியூக ஒத்துழைப்புகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெட்ரோல் நிலையங்களில் சந்தேகத்திற்கிடமான விற்பனை முறைகளைக் கண்டறியக, எச்சரிக்கை சமிக்ஞை அமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப அணுகுமுறைகளையும் தமது தரப்பு அமல்படுத்தியுள்ளதை அஸ்மான் அடாம் சுட்டிக்காட்டினார்.
"சந்தேகத்திற்கிடமான விற்பனைகளைக் காட்டக்கூடிய வளாகங்களுக்கு, கே.பி.டி.என்.-க்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் ஒரு எச்சரிக்கை அமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். மேலும் கே.பி.டி.என். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும்," என்றார் அவர்.
அமலாக்க நடவடிக்கைகளில் சுமார் 2,400 அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில், பெட்ரோல் மோசடியில் ஈடுபட்ட எந்தவொரு தரப்பினருடனும் கே.பி.டி.என். சமரசம் செய்யாது என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)