கோலாலம்பூர், மார்ச் 12 (பெர்னாமா) -- அமெரிக்கா-ஈரான் மோதல் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், அது தனது நிறுவனத்திற்கு கலவையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பெட்ரோனாஸ் தெரிவித்திருக்கிறது.
கச்சா எண்ணெயின் விலை உயர்வு, உற்பத்தி அளவில் லாபத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதிகரித்த செலவுகளை அது ஈடுசெய்ய உதவும் என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் அழுத்தங்கள் ஏற்படலாம் என்பதையும் பெட்ரோனாஸ் கோடிகாட்டியிருக்கிறது.
உலக சந்தையில் விலை உயரும்போது, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், சுத்திகரிப்பு, தளவாடங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீடு உள்ளிட்ட செலவுகளும் அதிகரிக்கும் என்று, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் பெட்ரோனாஸ் தெரிவித்திருக்கிறது.
மேலும், புவிசார் அரசியலின் நிச்சயமற்ற தன்மைகளால் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இச்சூழ்நிலையை எதிர்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை மலேசியர்கள் உணர்ந்திருந்தாலும், கால மாற்றத்திற்கு ஏற்ப அமல்படுத்தப்படவிருக்கும் நடவடிக்கைகளையும் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று பெட்ரோனாஸ் அறிவுறுத்தியிருக்கிறது.
இந்த விவகாரத்தில், மலேசியர்கள் எண்ணெயைச் சேமித்து வைக்கவோ அல்லது பீதியடைந்து எண்ணெயை வாங்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏனெனில் இந்நடவடிக்கை தற்போதைய நிலைமையை மோசமாக்கும் என்று பெட்ரோனாஸ் குறிப்பிட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)