பொது

தெரிந்தவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆடவர் பலி; சந்தேக நபருக்கு ஏழு நாள்கள் தடுப்புக் காவல்

12/03/2026 01:49 PM

மலாக்கா, மார்ச் 12 (பெர்னாமா) -- நேற்று, மலாக்கா, Kampung Sungai Udang-இல் தெரிந்தவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் 25 வயதுடைய ஆடவர் உயிரிழந்த சம்பவத்தில், ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவருக்கு வியாழக்கிழமை தொடங்கி ஏழு நாள்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Ayer Keroh மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் செய்தத் தடுப்புக் காவல் விண்ணப்பத்திற்குப் பிறகு, 43 வயதுடைய சந்தேக நபருக்கு, மாஜிஸ்திரேட் நூர் அஃபிக்கா ரடியா சைனூரின் அந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

நேற்றிரவு மணி 8.30 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், நெஞ்சுப் பகுதியில் கத்திக் குத்துக் காயங்களுடன் 25 வயதுடைய ஆடவர் ஒருவர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

பாதிக்கப்பட்டவரின் கைதொலைபேசி பழுதடைந்திருந்ததால், சந்தேக நபர் சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டவருக்கு ஒரு கைதொலைபேசியை கடனாக வழங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்ததாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ சுல்கைரீ முக்தார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் அதை பல்வேறு காரணங்கள் கூறி திருப்பிக் கொடுக்காத நிலையில், அவர் அதை போதைப்பொருள் வாங்க விற்று விட்டதாக சந்தேக நபர் எண்ணியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் இருந்த பூட்டப்படாத காரில் ஒழிந்து கொண்ட சந்தேக நபர், அங்கிருந்த பொது மக்களின் உதவியுடன் போலீசாரிடம் பிடிபட்டார்.

சந்தேக நபருக்கு முன்னதாகவே குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக குற்றப்பதிவுகள் இருக்கும் வேளையில், கொலை காரணமாக இவ்வழக்கு குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)