பொது

தேசிய நிலைத்தன்மைக்கு எதிரான சதிவேலை; மேலும் 14 பேர் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுவர்

19/03/2026 03:33 PM

புக்கிட் அமான், 19 மார்ச் (பெர்னாமா) --  நாட்டின் நிலைத்தன்மைக்கு எதிரான சதிவேலை குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக, அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம், செல்வாக்குமிக்க நபர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களை உட்படுத்தி மேலும் 14 பேரை வாக்குமூலம் பதிவு செய்ய அழைக்கவிருக்கிறது.

இவ்விகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களின் முழுமையான பெயர் பட்டியல் தங்கள் தரப்பிடம் இருப்பதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

"நாங்கள் இன்னும் ஆய்வு செய்தும், பிற விசாரணைகளை நடத்தியும் வருகிறோம். மேலும், சில பேரிடம் நாங்கள் வாக்குமூலங்களைப் பெறக்கூடும். அதன் அடிப்படையில், நாங்கள் ஒரு முடிவுக்கு வந்து அதை சட்டத்துறை தலைவரிடம் சமர்ப்பிப்போம்", என்றார் அவர்.

வியாழக்கிழமை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் 14 பேரிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

தொ புவான் நை’மா காலிட் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தாரா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், அத்தகவலை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்.

மற்றொரு நிலவரத்தில், டான் ஶ்ரீ அசாம் பாக்கியின் பங்கு உரிமை மற்றும் நிறுவன முறைகேடு பிரச்சனைகள் குறித்து கட்டுரைகள் எழுதியது தொடர்பாக, அனைத்துலகச் செய்தி தளமான ப்ளூம்பெர்க் மீது தங்கள் தரப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதையும் முஹமட் காலிட் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)