சிறப்புச் செய்தி

வினைத் தீர்க்கும் விநாயகர்

07/09/2024 07:44 PM

கோலாலம்பூர், 07 செப்டம்பர் (பெர்னாமா) --  ஐங்கரன் புகழ்பாடும் விநாயகர் சதுர்த்தி இன்று.

ஆவணியில் காணும் வளர்பிறை சதுர்த்தியான இன்றைய நாளில் விநாயகப் பெருமானை உளமாற வழிபட்டால் குறைகள் நீங்கி வளங்கள் பெரும் என்பது பலரின் நம்பிக்கையாகும்.

அதைப் புலப்படுத்தும் வகையில் இன்று நாடு முழுவதிலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வரும் வேளையில், கோலாலம்பூர் ஶ்ரீ கோர்ட்டுமலை கணேசர் ஆலயத்திலும், பக்தர்கள் வெள்ளத்தில் இக்கொண்டாட்டம் களைக் கட்டியிருந்தது.

பக்தர்களின் வசதிக்கேற்ப இன்று அதிகாலை நான்கு மணி தொடங்கி, இரவு வரை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஆலய குருக்கள் எம்.சிவாநந்தன் பட்டர் தெரிவித்தார்.

''வழக்கமான சிறப்புப் பூஜைகள் இன்றி, பக்தர்களின் இலகுத் தன்மைக்கு ஏற்ப இரவு முழுவது விநாயகருக்கான பூஜைகளே பிரதானமாக இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை சதுர்த்தி கொண்டாடப்படுவதால் இன்றைய நாளில் மற்ற பூஜைகள் நடைபெறாது. அதேவேளையில் ஆலயத்திற்கு வெளிப்புறத்திலும் கண்கொள்ளா காட்சியாக விநாயகர் வீற்றிருப்பர். அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் தரிசனமே,'' என்று அவர் கூறினார்.

காலை மணி ஒன்பதுக்கு மேல் ஆலயத்தில் வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி இருந்தது.

பெரும்பாலானவர்கள் கலாச்சார உடையணிந்து குடும்பத்தோடு வழிபட்டுச் சென்றதையும் காண முடிந்தது.

அதிலும் சில பக்தர்கள், ஆலயத்திற்கு நுழைவதற்கு முன்னதாக பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு ஏற்றியும் தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

''என்னுடைய அன்றாட வாழ்வில் விநாயகரே அணைத்துமாக இருக்கிறார். சில விஷயங்கள் கிடைக்க தாமதமானாலும் நிச்சயம் கிடைத்துவிடும்,'' என்கிறார் புத்ராஜெயவைச் சேர்ந்த கணேசன் ராமைய்யா.

''நான் இந்த ஆலயத்தில் தேவாரம் பாடுகிறேன். என்னைப் பொருத்தவரையில் தேர்வு உட்பட அனைத்து பிள்ளையாரே எனக்கு துணையாக உள்ளார். அவருக்கு எப்போதும் நான் புகழ்பாடுவேன்,'' என்று நீலாயைச் சேர்ந்த பிரெஷ்னா சிவகுரு தெரிவித்தார்.

''பிள்ளையாரைப் பார்க்காவிட்டால் அன்றைய நாளே பூர்த்தியடையாதது போல இருக்கும். எங்கு சென்றாலும் அவரைப் பார்த்துவிட்டு தான் செல்வேன். இன்றுவரை என்று ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கு அவர் ஒருவரே காரணம் என்கிறார் அம்பாங்கைச் சேர்ந்த நல்லதம்பி கருப்பண்ணன்

இதனிடையே, தாய்லாந்திலும் விநாயகர் வழிபாடு இருப்பதாக அந்நாட்டைச் சேர்ந்த சுற்றுப் பயணிகள் தெரிவித்தனர்.

"நாங்கள் இங்கு வந்து இந்த அழகிய தங்க ரதத்தையும் வனப்போடு இருந்த ஆலயத்தையும் பார்த்து ரசித்தோம். இன்று எங்களின் இஷ்ட தெய்வமான கணபதியையும் வழிபட்டு மகிழ்ச்சியுடன் செல்கிறோம். எனது நாட்டு பல்கலைக்கழகத்தில் இந்து மதத்தைப் பற்றி கற்றுள்ளேன். அது எனக்கு சிறந்த அனுபவத்தை அளித்தது. அதன் பிறகு நான் கணேசரை அதிகளவில் நேசிக்கத் தொடங்கினேன்," என்று  பேங்காக்கைச் சேர்ந்த லத்தா சின்னான்வான் தெரிவித்தார். 

கோலாலம்பூரைச் சுற்றிலும் அதிகமான விநாயகர் ஆலயங்கள் இருந்தாலும், கோர்ட்டுமலை கணேசர் ஆலயமே அதிகமான பக்தர்களின் தேர்வாக உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)