உலகம்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை; அறுவர் பலி

08/09/2024 05:43 PM

மணிப்பூர், 08 செப்டம்பர் (பெர்னாமா) --  இந்தியா மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கின்றது.

அங்குள்ள இரண்டு சமூகங்களுக்கு இடையே வன்முறை கலவரங்கள் தொடரும் நிலையில் சனிக்கிழமை ஏற்பட்ட புதிய தாக்குதலில் பொதுமக்கள் உட்பட அறுவர் கொல்லப்பட்டனர்.

ஆயுதமேந்திய நபர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் பலியானதாக மணிபூர் மாநில போலீஸ் அதிகாரி கே.கபிப் கூறினார்.

மணிப்பூரின், ஜிரிபாம் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த வன்முறை தாக்குதலில் ஆயுதமேந்திய நபர்கள் வீடொன்றில் புகுந்து தூங்கிக் கொண்டிருந்தவரைச் சுட்டுக்கொன்றதாக கே.கபிப் தெரிவித்தார்.

"அவர்கள் ஜிரிபாம் மாவட்டத்தின் கீழ் உள்ள நுங்சாப்பி கிராமத்தைத் தாக்கினர், அதில் 63 வயதான யுரெம்பாம் குலேந்திர சிங்கா என்ற மூத்த குடிமகன் கொல்லப்பட்டார், ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், அதிகாலையைத் தங்களுக்கு சாதகமாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். ரஷித்பூர் கிராமத்திற்கு அருகில் சென்றதில் அங்குள்ள தன்னார்வலர்கள், அவர்களை எதிர்கொண்டனர்... துப்பாக்கிச் சூடு நடந்தது", என்று கூறினார்.

32 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்டேய் மற்றும் குக்கீ சமூகங்களுக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு வருகிறது.

அரசு வேலைகள், கல்வி, பொருளாதாரம் போன்றவற்றின் இட ஒதுக்கீடுகளை மெய்டேய் சமூகத்தினருக்கு வழங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கடந்தாண்டு மே மாதம் தொடங்கி இந்த மோதல்கள் அங்கு வலுக்கின்றன.

இதுவரை 225-க்கும் அதிகமானோர் இதில் பலியானதோடு, 60,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)