உலகம்

நரேந்திர மோடியை சந்தித்தார் அபுதாபி பட்டத்து இளவரசர்

09/09/2024 05:44 PM

புது டெல்லி, 09 செப்டம்பர் (பெர்னாமா) -- அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலிட் முஹ்மட் பின் சாயிட் அல் நஹ்யான், இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

மத்தியக் கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் மோடியின் அழைப்பை ஏற்று ஷேக் காலிட் இந்தியாவிற்கு வருகை மேற்கொண்டுள்ளார்.

ஷேக் காலிட்டுடன் ஐக்கிய அரபு சிற்றரசின் சில அமைச்சர்களும் வர்த்தகப் பிரநிதிகளும் இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.

ஷேக் காலிட்டின் வருகை, இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு சிற்றரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதோடு, புதிய மற்றும் மேம்பாடு கண்டு வரும் பகுதிகளில் பங்காளித்துவத்திற்கான வழிகளைத் திறக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய அரபு சிற்றரசில் பணிபுரியும் 30 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் ஒவ்வோர் ஆண்டும் கோடிக் கணக்கான டாலர்களை இந்தியாவிற்கு அனுப்புகின்றனர்.

அபுதாபி பட்டத்து இளவரசராக ஷேக் காலிட் இந்தியாவுக்கு வருகை புரிவது இதுவே முதல் முறையாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502