பொது

செப்டம்பர் 15-இல் ம.இ.கா.வின் 78-ஆவது பேராளர் மாநாடு

09/09/2024 05:51 PM

கோலாலம்பூர், 09 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டில், அதிகாரப்பூர்வ மதம் அல்லது இதர மத விவகாரத்தை உட்படுத்தி பிரச்சனைகள் எழுப்பும் எந்தவொரு தரப்பு மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க ம.இ.கா அரசாங்கத்திற்கு பரிந்துரை ஒன்றை முன்வைக்கவுள்ளது.

வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ம.இ.கா.வின் 78-ஆவது பேராளர் மாநாட்டில் தாக்கல் செய்யப்படும் தீர்மானங்களில் அதுவும் ஒன்றாகும் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமைத்துவத்திற்கு பிளவுப்படாத ஆதரவு வழங்குவது குறித்த தீர்மானங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் சரவணன் குறிப்பிட்டார்.

இன்று கோலாலம்பூர், மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சரவணன் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இந்திய மக்களுக்கான அரசாங்க உதவிகள், வேலை வாய்ப்புகள், கல்வி போன்ற விவகாரங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட கூட்டத்தில் பேராளர்கள் விவாதிக்க தலைவரின் கொள்கை உரையில் வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

சிலாங்கூர், ஷா ஆலமில் உள்ள IDCC மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி மதியம் மணி 2.00-க்கு அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.

''மாநாட்டில் பேராளர்கள் காலை மணி 7 முதல் இதில் கலந்து கொள்வர். காலை 9.00 மணி தொடங்கி மதியம் இரண்டு மணி வரை மஇகா தலைவரின் கொள்கை உரை மீதான விவாதம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ திறப்பு விழா நடைபெறும். இதில் நாடு முழுவதிலும் இருந்து 1480 பேராளர்கள் கலந்து கொள்வார்கள். அதோடு. 177 பார்வையாளர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர். ஏறக்குறைய 1700 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்,'' என்றார் அவர்.

கடந்த ஆண்டுகளைப் போல் இல்லாமல், இவ்வாண்டு காலை தொடங்கி மாலை வரை நடைபெறுகின்ற ஒரு நாள் மாநாடாக இது அமையும் என்றும் சரவணன் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502