பொது

ஜோகூர் பாருவில் உள்ள சில பள்ளிகள் மூடப்படுமா? சுகாதார அமைச்சின் ஆலோசனையை கல்வியமைச்சு பெறும்

09/09/2024 05:55 PM

குளுவாங், 09 செப்டம்பர் (பெர்னாமா) --   ரசாயன துர்நாற்ற மாசுபாடு தொடர்ந்து ஏற்பட்டால், ஜோகூர் பாருவில் உள்ள சில பள்ளிகள் மூடப்படுமா, இல்லையா என்பது குறித்து சுகாதார அமைச்சு மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களின் பரிந்துரையையும் ஆலோசனையையும் கல்வியமைச்சு பெற்றுக் கொள்ளும்.

அதேவேளையில், மாசுபாடு ஏற்படும் பகுதிக்கு அருகில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலை சீராக உள்ளதை உறுதி செய்ய தங்கள் தரப்பு தொடர்ந்து நிலைமையைக் கண்காணிக்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

இன்று குளுவாங் மாவட்டத்தில் அமைந்துள்ள பெர்டானா இடைநிலைப்பள்ளியில் தேசிய அளவில் நடைபெற்ற தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சி மற்றும் கல்வி தினத்தை தொடக்கி வைத்தப் பின்னர் ஃபட்லினா அவ்வாறு கூறினார்.

ஜோகூர் பாரு, கம்போங் மெலாயு பண்டானில் உள்ள சுங்கை பண்டானில் காற்றின் தரத்தை கண்காணித்ததில் அங்கு உயர் நிலையிலான அமோனியா வாயு அடையாளம் காணப்பட்டிருப்பதாக ஜோகூர் சுற்றுச் சூழல் துறையின் மூத்த துணை இயக்குநர் முஹமட் ரஷ்டான் தோப்பா, கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.

இருப்பினும், அதற்கு மறுநாள் மேற்கொள்ளப்பட்ட காற்றின் தரக் குறியீட்டில் அது மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)