உலகம்

மீண்டும் பணியைத் தொடங்க போராட்டம் நடத்திய மருத்துவர்களுக்கு உத்தரவு

10/09/2024 05:34 PM

டெல்லி, 10 செப்டம்பர் (பெர்னாமா) --  இந்தியாவில் கடந்த மாதம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய அனைத்து மருத்துவர்களும், செவ்வாய்கிழமை மீண்டும் பணியைத் தொடங்குமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை உத்தரவிட்டது.

அதனைச் செய்யத் தவறினால் அவர்கள் "பாதகமான நடவடிக்கையை" எதிர்கொள்ள நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அப்பெண்ணுக்கு நீதி கோரி நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஒரு போலீஸ் தன்னார்வலர் கைது செய்யப்பட்டதோடு, கடந்த வாரம் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் ஊழியர்களுக்கான ஓய்வு இடங்கள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாதது, போன்றவற்றினால் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் சிறந்த வசதிகளைக் கோரிக்கை வைத்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, செவ்வாய்கிழமை மாலைக்குள் பணிக்குத் திரும்பும் மருத்துவர்களுக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு தனித்தனி அறைகள் மற்றும் கழிவறைகள் உட்பட மறைக்காணியைப் பொருத்துவது என்று மருத்துவர்களின் அச்சத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை உறுதிசெய்ய மேற்கு வங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)