சிறப்புச் செய்தி

ஒரு லட்சத்திற்கும் அதிகமான முதலாம் ஆண்டு மாணவர்கள் 3M திறனைக் கொண்டிருக்கவில்லை - காரணங்கள் என்ன?

10/09/2024 08:19 PM

கோலாலம்பூர், 10 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில், 122,062 முதலாம் ஆண்டு மாணவர்கள், 3 M எனப்படும் வாசிப்பு, எழுத்து, கணிதப் பாடங்களில் போதுமான திறனைக் கொண்டிருக்கவில்லை என்று கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கல்வியில் மாணவர்கள் எதிர்நோக்கக்கூடிய சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிந்து தேவையான முன்னெடுப்புகளை எடுக்காததே, இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் சார்பு நிலை பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ். இராஜேந்திரன் கூறுகின்றார்.

122, 062 மாணவர்களில் 13,669 மாணவர்கள் முழுமையாக பின்தங்கியுள்ளதை கல்வி அமைச்சு கண்டறிந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் பள்ளித்தவணை தொடங்கப்பட்டது முதல் மூன்று மாதங்களாக மாணவர்களின் வகுப்பு அளவிலான தேர்ச்சி நிலையை அடிப்படையாக கொண்டு இத்திறன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாசிப்பு, எழுத்து, கணிதப் பாடங்களில் மாணவர்களின் திறன் குறைந்துள்ளது கவலைக்குரியதாக இருந்தாலும், அவர்களின் நிலையை அறிந்து கொள்வதற்கு
கல்வி அமைச்சு மேற்கொண்ட இம்முயற்சி எதிர்காலத்திற்கு பயனளிக்கும் என்று பேராசிரியர் முனைவர் இராஜேந்திரன் தெரிவித்தார்.

''2023ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு அமரவில்லை. இது போன்று கல்வி நிலையில் மாணவர்கள் எதிர்நோக்கக்கூடிய சிக்கல்களை நாம் முன்கூட்டியே கண்டறிந்து தேவையான முன்னெடுப்புகளை எடுக்காததுதான் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. ஆக, கல்வி அமைச்சின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது,'' என்றார் அவர்.

கல்வி அமைச்சின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர் அதற்கான காரணத்தையும் விளக்கினார்.

''கல்வி அமைச்சின் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக பெற்றோர்கள். இந்த முயற்சி ஏன் முக்கியம் என்றால், எந்த நிலையில் மாணவர்கள் இருக்கின்றார்கள் என்பதை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மாணவர்களுக்கு பல்வேறு வகையிலே நன்மை அளிக்கும். குறிப்பாக அவர்கள் பள்ளியை பாதியிலேயெ விட்டு விலகுவதைக் குறைக்க முடியும்,'' என்றார் அவர்.

அதோடு, மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டு வர ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவது குறித்தும் முனைவர் இராஜேந்திரன் விவரித்தார்.

''அதிலும் குறிப்பாக, பயிற்சிகள் தொடர்பான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு அந்த ஆசிரியர்களின் தயார் நிலையை மேம்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில், கற்றல் கற்பித்தலில் விளைப்பயனை அதனுடைய மதிப்பீடுகள் நிச்சயமாக நல்ல பயனைக் கொண்டு வரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை,'' என்றார் அவர்.

3M திறனில் முதலாம் ஆண்டு மாணவர்களின் வளர்ச்சி குறைந்துள்ளது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல் தொடர்பில், விளக்கம் பெற பெர்னாமா தொடர்பு கொண்டபோது முனைவர் இராஜேந்திரன் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502