சிறப்புச் செய்தி

குரங்கம்மைத் தொற்று: மலேசியர்கள் முன்னெச்சரிச்சையுடன் செயல்படும்படி வலியுறுத்து

11/09/2024 07:31 PM

கோலாலம்பூர், 11 செப்டம்பர் (பெர்னாமா) -- காங்கோ ஜனநாயக குடியரசில் MPOX எனப்படும் குரங்கம்மை நோய் சம்பவங்கள் மோசமடைந்து வருவதோடு, ஆப்பிரிக்க நாடுகளிலும் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

உலக மக்களை அச்சுறுத்தி வரும் குரங்கம்மை நோய் சம்பவங்கள் இதுவரை மலேசியாவில் பதிவாகவில்லை.

எனினும், மலேசியர்கள் முன்னெச்சரிச்சையுடன் பாதுகாப்பாக இருப்பதற்கான செயல்முறைகள் குறித்து இன்றைய நலம் வாழ அங்கத்தில் பகிர்கின்றார் மருத்துவர் டாக்டர் ஜெய்சுதன் நாயர் தம்பி நாயர்.

கடந்த 2022-ஆம் ஆண்டில் இருந்து இவ்வாண்டு ஆகஸ்ட் வரையில் 120-க்கும் அதிகமான நாடுகளில் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான குரங்கம்மை நோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதோடு, இந்நோயினால் இதுவரை 220 மேற்பட்ட மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்கள் காட்டுகின்றன.

காங்கோ, நைஜிரியா, சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் பதிவாகியிருக்கும் குரங்கம்மை நோய் சம்பவங்கள் ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட நாடுகளுக்கு மலேசியர்கள் பயணம் மேற்கொண்டிருந்தால் சுகாதார பரிசோதனைச் செய்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று டாக்டர் ஜெய்சுதன் நாயர் தெரிவித்தார்.

''நீங்கள் இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தால் இரண்டில் இருந்து நான்கு வாரத்திற்குள் காய்ச்சல், உடம்பு வலி அல்லது தோல் வியாதிகள் இருந்தால் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும்,'' என்றார் அவர்.

இதனிடையே, குரங்கம்மை நோயைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் அறிகுறிகள் பற்றியும் விளக்குகின்றார் டாக்டர் ஜெய்சுதன்.

''இந்த நோயைத் தடுப்பதற்கு நெருங்கிய தொடர்பு, பாலியல் உறவுகள் மற்றும் SKIN TO SKIN தொடர்பை தவிர்க்க வேண்டும். பிறகு சுவாசக் கவசம் மற்றும் கிருமி நாசினி திரவத்தையும் பயன்படுத்தலாம். இந்த நோயின் அறிகுறி காய்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடம்பு வலி, சிறு அம்மைப்போன்ற அரிப்புகள் வரலாம்,'' என்றார் அவர்.

குரங்கம்மை நோய் 90 விழுக்காடு சுயமாக கட்டுப்படுத்தக்கூடிய நோயாகும்.

இரண்டில் இருந்து நான்கு வாரத்திற்குள் குணமாகக் கூடிய தன்மைக் கொண்ட இந்நோய், பாதிக்கப்பட்டவருக்கு 10 விழுக்காடு சிக்கலை ஏற்படுத்தும் என்று டாக்டர் ஜெய்சுதன் கூறினார்.

''துணை சிகிச்சை, காய்ச்சல், தொண்டை வழி, உடம்பு வலி மருந்து, நல்ல உணவு, நீர், ஓய்வு எடுத்தாலே போதுமானது, ஆனால், 10 விழுக்காடு நோயாளிகளுக்கு சிக்கல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இவர்கள் கண்டிப்பாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வேண்டும். குரங்கம்மை நோய்க்கு தனி தடுப்பூசி கிடையாது. ஆனால், அம்மை நோயின் தடுப்பூசியை பயன்படுத்தலாம். இதனைப் பற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் ஆலோசனைப் பெறலாம்,'' என்றார் அவர்.

எனவே, சாதாரண காய்ச்சல், உடம்பு வலிகள் இருந்தாலும் மெத்தனப்போக்குடன் இல்லாமல் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற்றுக் கொள்வது சிறந்த வழி என்றார் டாக்டர் ஜெய்சுதன்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)