உலகம்

பயிற்சி மருத்துவர் கற்பழிப்பு விவகாரம்; மாநில முதலமைச்சர் பொதுவில் மன்னிப்பு கோரினார்

13/09/2024 04:48 PM

கொல்கத்தா, 13 செப்டம்பர் (பெர்னாமா) --  இந்தியா மேற்கு வங்கத்தில், பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பொதுவில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தாம் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகவும் தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார்.

''என்னை மன்னித்து விடுங்கள். இந்த நாட்டு மக்கள், உலக மக்கள் மற்றும் அவர்களுக்கு (மருத்துவர்கள்) ஆதரவு வழங்குபவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து உங்கள் ஆதரவை வழங்குங்கள். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பாதிக்கப்பட்டவருக்கு நீதி வேண்டும். சாமானிய மக்களுக்கு நீதி வேண்டும்... சாமானிய மக்களின் சிகிச்சைகளுக்கு நீதி வேண்டும். உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, அவர்கள் (போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள்) பணியில் சேர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்'', என்று அவர் கூறினார்.

போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களை மாநில அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில், அதனை மருத்துவர்கள் நிராகரித்தனர்.

பேச்சுவார்த்தை நேரலையாக ஒளிப்பரப்பட வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் அனுமதி வழங்காததால், மருத்துவர்கள் அதனை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

அதற்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், சில அதிகாரிகளை பணிநீக்கம்செய்ய வலியுறுத்தியும் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணிக்கு திரும்புமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கிய பிறகும், பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் 34-வது நாளாக நேற்றும் நீடித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)