சிறப்புச் செய்தி

மலையாள வம்சாவளியினரின் பாரம்பரிய முறைப்படி மகிழ்ச்சியான ஓணம் பண்டிகை 

15/09/2024 09:53 PM

கோலாலம்பூர், 15 செப்டம்பர் (பெர்னாமா) -- மலையாள வம்சாவளியினர் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் திருநாளாகும்.

இத்திருநாளை இன்று உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் தங்களது பாரம்பரியத்தைப் பின்பற்றி கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டு, வேலைக் காரணமாக பல ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வரும் மலையாள வம்சாவளியினர் சிலர் இந்த ஓணம் திருநாளை பாரம்பரிய முறைப்படி கொண்டாடிய தருணங்கள் தொடர்ந்து இடம்பெறுகிறது.

பழங்காலத்தில் கேரளாவில் நல்லாட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி திருவோணம் நாள் அன்று தனது நாட்டு மக்களைப் பார்ப்பதற்காக பூமிக்கு வரும் நாளை நினைவுகூறும் விதமாகத்தான் மலையாள சமூகத்தினர் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

ஒன்பது நாட்கள் மேற்கொள்ளும் பல பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளுக்குப் பின்னர், பத்தாம் நாளில் புத்தாடைகளை அணிந்து, பல்வகை உணவுகளைச் சமைத்து, பூக்கோலமிட்டு, மலையாளிகள் இப்பண்டிகையை வரவேற்பர்.

இந்தப் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் தொடர்ந்து பின்பற்றி ஒவ்வோர் ஆண்டும் ஒற்றுமையாக ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் பிரிக்பீல்ட்ஸ் ஶ்ரீ இம்பியான் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த மலையாள வம்சாவளியினர்.

சுமார் 10 மலையாள குடும்பங்கள் இங்கு வசித்து வரும் வேளையில், கடந்த மூன்று ஆண்டுகளாக ஓணம் பண்டிகையை ஒன்றிணைந்து கொண்டாடி வருவதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் மது ஜெயநாராயணன் தெரிவித்தார்.

'ஓணம் சத்யா'' எனும், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளை உள்ளடக்கிய 24 வகையிலான உணவு வகைகள் இப்பண்டிகையின் சிறப்பம்சமாகும்.

அதனை சமைப்பது, அலங்கரிப்பு பணிகள், மண்டபம் பதிவு, உணவு பரிமாறுவது, கலை நிகழ்ச்சி உட்பட கொண்டாட்டத்திற்கான ஏற்பாட்டு பணிகளை தாங்கள் அனைவரும் ஒற்றுமையாக மேற்கொண்டு ஒவ்வோர் ஆண்டும் இத்திருநாளை கொண்டாடி வருவதாக அவர் கூறினார்.

''இது முன்னர், ஓரிரு குடும்பங்கள் மட்டும் இருக்கும் போது சிறிய அளவில் கொண்டாடி வந்தோம். இப்போது பெரிய அளவில் மண்டபம் பதிவு செய்து கொண்டாடி மகிழ்கிறோம். ஒற்றுமையாகவே கொண்டாடுகிறோம். ஒருவருக்கொருவர் ஒண்றிணைந்து செயல்பட்டு உதவிக் கொள்கிறோம்,'' என்றார் மது ஜெயநாராயணன்

தங்களது சொந்த ஊரான கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடுவது தனிச் சிறப்பு என்றாலும் இங்குள்ள குடும்பங்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவதும் மனதிற்கு திருப்தி அளிப்பதாக சிலர் தெரிவித்தனர்.

''கேரளாவில் கொண்டாடுவது போன்றுதான் இங்கும் கொண்டாடுகிறோம். ஒரே குடும்பமாக இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சியும் திருப்தியும் உள்ளது. இங்குள்ள கொண்டாட்டம் மேலும் சிறப்பாக உள்ளது,'' என்றனர்.

இதனிடையே, ஓணம் மட்டுமல்லாது இதர பண்டிகைகளையும் ஒரே குடும்பம் போன்று இணைந்து கொண்டாடும் அவர்கள், தங்களது மொழியையும் கலாச்சாரத்தையும் இளம் தலைமுறையினரிடையே கொண்டுச் சேர்ப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

''பிள்ளைகளுக்கு ஆன்மிக வகுப்புகள் கற்றுத் தருகிறோம். மலையாள மொழியை வளர்க்கும் நோக்கில் வீட்டில் மலையாளம் பேச ஊக்குவிப்போம்,'' என்றார் அயலூர் விஷ்வநாதன் சுபராமன்

தங்களின் பண்டிகைகளை எங்கிருந்து கொண்டாடினாலும் தங்களது பழக்க வழக்கங்கள் மாறக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)