பொது

சுதந்திரத்தின் அர்த்தத்திற்குப் புத்துயிர் ஊட்டுவோம் - பிரதமர் அழைப்பு

16/09/2024 05:27 PM

கோலாலம்பூர், 16 செப்டம்பர் (பெர்னாமா) --  மலேசிய தினத்தை முன்னிட்டு, பிளவு மற்றும் பகையை நிராகரித்து சுதந்திரமான மலேசியா உருவாக்கப்பட்டதன் அர்தத்தை உணருமாறு மலேசிய மக்களுக்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், மலேசியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் திறனையும் ஆற்றலையும் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்த வேண்டும் என்று தமது முகநூல் பதிவில் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மலேசிய தினக் கொண்டாட்டம் இன, மத, கலாச்சாரம் கடந்து, நாட்டின் மீதான ஆழ்ந்த அன்பையும் ஒருமைப்பாட்டு உணர்வையும் மக்களிடையே ஊக்குவிக்க வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

மலேசியா உருவாக்கப்பட்டு 61 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அக்காலக்கட்டத்தில் எதிர்நோக்கிய பல்வேறு தடைகள் ஒன்றிணைந்து வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் 61ஆம் ஆண்டு மலேசிய தின வாழ்த்துகளையும் அவர் அப்பதிவில் தெரிவித்திருந்தார்.

1963ஆம் ஆண்டு மலேசியா உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் தேதி மலேசியா தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய அளவிலான இத்தினக் கொண்டாட்டம் இன்று இரவு சபா, கோத்தா கினபாலுவிலுள்ள பாடாங் மெர்டேக்காவில் நடைபெறவிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)