உலகம்

கடும் வீழ்ச்சியில் இலங்கை

16/09/2024 07:09 PM

காலி, 16 செப்டம்பர் (பெர்னாமா) --  இலங்கையின் நிதி கையிருப்பு குறைந்து, எரிபொருள், உரம் மற்றும் இயந்திரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலையில் அந்நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது.

அந்நாட்டு பணவீக்கம் 70 விழுக்காடாகப் பதிவாகியதோடு, மின்சார கட்டணங்கள் 65 விழுக்காடு உயர்ந்து நாணயத்தின் மதிப்பும் 45 விழுக்காடு குறைந்துள்ளது.

நீண்டநேர மின்சார துண்டிப்பு, எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசை மற்றும் மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை ஆகியப் பிரச்சனைகளால் சினமடைந்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனால், நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தாபாயா ராஜபக்சா பின்னர் பதவி விலகினார்.

அதைத் தொடர்ந்து அனைத்துலக நிதியின் வழி 290 கோடி டாலர் திட்டம் மற்றும் இரண்டாயிரத்து 500 கோடி டாலர் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு திட்டம் மூலம் ஓரிலக்க பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்களைக் கொண்டு வருவதன் மூலம் தற்காலிக மீட்சியை பட்டியலிட்ட ரணில் விக்கிரமசிங்கை நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்தது.

நெருக்கடியின் உச்சத்தின் போது அதன் பொருளாதாரம் 7.8 விழுக்காடு வீழ்ச்சி கண்டப் பின்னர் முதல் முறையாக 2024-இல் இலங்கை பொருளாதாரம் 3 விழுக்காடு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழ்நிலைகளுக்கு மத்தியில், இம்மாதம் 21ஆம் தேதி இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான தங்களின் அதிபரை தேர்வு செய்வதில் மக்களின் முடிவு இவ்விவகாரங்களைக் கருத்தில் கொண்டு அமையும் என்று நம்பப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)