பொது

பெண்ணுக்கு  மிரட்டல்; GISBH உறுப்பினர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18/09/2024 04:55 PM

புத்ராஜெயா, 18 செப்டம்பர் (பெர்னாமா) -- GISBH எனப்படும் Global Ikhwan Service and Business குழும நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவர் கடந்த மாத தொடக்கத்தில் பெண் ஒருவருக்கு அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்ததாக இன்று காலை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

மாஜிஸ்திரேட் அஹ்மட் அஃபிக் ஹசான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்ட 39 வயதான முஹமட் ரிசா மாக்கார்  அதனை மறுத்து விசாரணைக் கோரினார்.

கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் 25 வயதான பெண் ஒருவருக்கு மிரட்டல் விடுத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

சம்பந்தப்பட்ட அப்பெண்ணின் வசிப்பிடம், கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை தாம் நன்கு அறிந்திருப்பதாக கூறி மூன்று மனைவிகள் மற்றும் பத்து பிள்ளைகளுக்குத் தந்தையான முஹமட் ரிசா மிரட்டல் விடுத்துள்ளார்.

GISBH குழும நிறுனவத்தின் முன்னாள் உறுப்பினரான அப்பெண் வழங்கிய போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ளவே அந்நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 506-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் ஈராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

பத்தாயிரம் ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அவ்வாடவரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதோடு, இவ்வழக்கு நிறைவு பெறும் வரையில் மாதந்தோறும், முதல் வாரத்தில், அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)