பொது

குடிநுழைவு துறையின் மூத்த அதிகாரி அக்டோபரில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்

18/09/2024 05:00 PM

புத்ராஜெயா, 18 செப்டம்பர் (பெர்னாமா) -- வெளிநாட்டவர்கள் அல்லது சட்டவிரோதக் குடியேறிகளை நாட்டிற்குள் அழைத்து வருவதற்காக சிறப்பு முகப்பை ஏற்பாடு செய்வதில் முக்கிய நபராக செயல்பட்ட குடிநுழைவு துறையின் மூத்த அதிகாரி ஒருவர் அக்டோபர் மாத தொடக்கத்தில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

40 வயதான அந்த அதிகாரி, இதர 50 அதிகாரிகளைக் கட்டுப்படுத்தி இந்த மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட வைத்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்பிஆர்எம்-இன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

"நாங்கள் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், ஏறக்குறைய 50 அதிகாரிகளைக் கட்டுப்படுத்தியுள்ளார். அவர் செல்வாக்கு மிக்கவர் என்று நான் கூறுகிறேன். அவரின் கட்டளையைச் செயல்படுத்தக் கிட்டத்தட்ட அனைத்து குடிநுழைவு அதிகாரிகளுக்கும் அவர் இடைத்தரகராகச் செயல்பட்டார்," என்றார் அவர்.

கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அந்த அதிகாரி கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக  அசாம் பாக்கி தெரிவித்தார்.

மியன்மார், வங்காளதேசம், இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து வெளிநாட்டினரை, சிறப்பு முகப்பு மூலம் நாட்டிற்குள் அழைத்து வரும் மோசடி நடவடிக்கையை கடந்த மாதம் எஸ்பிஆர்எம். அம்பலப்படுத்தியது.

இந்த மோசடி நடவடிக்கை வழி, நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சோதனை நடைமுறையை பின்பற்றாமல் சிறப்பு முகப்பு மூலம் அந்நிய நாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)