பொது

உறுப்பினர்களுக்கு 8% இலாப ஈவு; தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் அறிவிப்பு

07/03/2026 06:57 PM

ஈப்போ , மார்ச் 07 - கடந்தாண்டு தணிக்கை செய்யப்படாத கணக்கறிக்கையின் வழி  3 கோடியே 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் ஈட்டியுள்ளது.

இதன்வழி, கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்  வாரியக்  குழுவினரின் பரிந்துரையின் கீழ் உறுப்பினர்களுக்கு எட்டு விழுக்காட்டு இலாப ஈவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவன் அறிவித்தார். 

சுமார் 60,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இச்சங்கத்தில் பேராக்கே, இரண்டாவது அதிக உறுப்பினர்களைக் கொண்ட மாநிலமாகத் திகழ்வதாக டத்தோ சகாதேவன் பாராட்டினார்.

தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக 1960ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இச்சங்கம், தற்போது வீட்டுடைமைத் திட்டம், கல்வி உதவித்தொகை, தமிழ் இலக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் இலக்கியப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொதுநல சேவைகளுடன் தமிழ் வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வருவதை அவர் கோடிகாட்டினார்.

ஆண்டுதோறும் சிறந்த வளர்ச்சிப் பதிவை எட்டி வரும் நாட்டின் மிகப் பெரிய கூட்டுறவு சங்கங்களில் ஒன்றான தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், அதன் உறுப்பினர்களின் இருப்புத் தொகைக்கேற்பத் தகுந்த இலாபத்தை வழங்கி வருவதாகவும் சகாதேவன் கூறினார்.

''அதேவேளையில் அடுத்த ஆண்டு தோராயமாக உறுப்பினர்கள் எவ்வகை இலாபத்தை அடைவார்கள் என்ற உத்தேசக் கணக்கும் இன்று வழங்கப்பட்டது. ஏறத்தாழ அது மூன்று கோடியே 80 லட்சம் ரிங்கிட் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக உறுப்பினர்களிடம் இன்று தெரிவித்தோம்,'' என்றார் அவர்.

வெள்ளிக்கிழமை மாலை மணி 4.30-க்கு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் பேராக் மாநில வட்டாரக் கூட்டம் ஈப்போவில் உள்ள செம்பிறை சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சகாதேவன், பேராளர்களுக்கு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிதி நிலவரங்கள் குறித்து அவ்வாறு விளக்கம் அளித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)