பொது

பாதுகாப்பையும் திறனையும் மேம்படுத்துவதற்கான ஆற்றலை சிஏஏஎம் அதிகரிக்கிறது

18/09/2024 05:14 PM

கோலாலம்பூர், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- வளர்ந்து வரும் உலகளாவிய மற்றும் வட்டார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பையும் திறனையும் மேம்படுத்துவதற்கான ஆற்றலை மலேசிய பொது விமானப் போக்குவரத்து ஆணையம், சிஏஏஎம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நாட்டின் பொது விமானப் போக்குவரத்துத் துறையில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியை நிலைநிறுத்துவதில் அந்நடவடிக்கை அவசியம் என்று போக்குவரத்து துணை அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபோல்லா தெரிவித்தார்.

ஆசியா-பசிபிக் வட்டாரம் உலகின் மிகப்பெரிய விமான சந்தையாகும் என்று அவர் கூறினார்.

மேலும் அதிகமான அனைத்துலக பயணிகளின் எண்ணிக்கையை அது கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு கிலோமீட்டர் மூலம் வருவாய் ஈட்டப்படும் வேளையில், விமான போக்குவரத்து திறன் மற்றும் பாதுகாப்பு தொடர்புடைய சவால்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதை ஹஸ்பி ஹபிபோல்லா சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பான, திறமையான மற்றும் சுற்றுச்சூழல் அம்சத்தை கருத்தில் கொண்டு வளர்ச்சியை நிர்வகிக்க அனைத்துலக  வட்டார மற்றும் தேசிய அளவில் விமானப் பாதுகாப்பு திட்டமிடல் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

புதன்கிழமை, கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட மலேசிய விமானப் பாதுகாப்புக் கருத்தரங்கை தொடக்கி வைத்து உரையாற்றும் போது  ஹஸ்பி ஹபிபோல்லா அத்தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)