உலகம்

ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல்; வாக்குப்பதிவு  தொடங்கியது 

18/09/2024 05:25 PM

காஷ்மீர், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

காஷ்மீரில் 16 தொகுதிகள், ஜம்முவில் 8 தொகுதிகள் என மொத்தம் 24 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25, அக்டோபர் முதலாம் தேதி என மூன்று கட்டங்களாகத் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

பாஜக, காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக்கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) , அவாமி இத்தேஹாத் கட்சிகள் ஆகியவை இத்தேர்தலில் களமிறங்கும் முக்கிய கட்சிகளாகும்.

பாஜக ,காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக்கட்சி ஆகியவற்றிற்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

முதல்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 23 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

இங்கு நிலவிவரும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

வாக்குகள் அக்டோபர் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019-ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதன் முறையாக நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)