பொது

இணைய சூதாட்டத்தின் விளைபயன்

18/09/2024 08:56 PM

கோலாலம்பூர், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- "என் கணவர் இணைய சூதாட்டத்திற்கு அடிமையாகிவிட்டார், அவர் கடன்பட்டிருக்கிறார், வீட்டுக் கட்டணம், உணவுப் பொருட்களை வாங்குதல், குழந்தைகள், பள்ளி செலவுகள் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்ள வேண்டும். என்னை அவமானப்படுத்துவது, தினமும் திட்டுவது, அவரை பிரிந்து செல்லவே தோன்றுகிறது."

சூதுக்கு அடிமையாகிய கசப்பான கதைகளில் இதுவும் ஒன்று. சம்பந்தப்பட்ட நபரை மட்டும் கடன் தொல்லையில் சிக்கவைப்பது மட்டுமின்றி, பாசம் மற்றும் அன்பின் அடிப்படையில் கட்டப்பட்ட குடும்பத்தையும் அழிக்கிறது.

180,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட "Tanya Peguam" என்ற முகநூல் பக்கத்தில், அடையாளம் மறைக்கப்பட்ட பெண் ஒருவரின் மனக்குமுறல் அதுவாகும்.

சட்டம் தொடர்பான பின்னணி கொண்ட ஐந்து நிர்வகிப்பாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களால் இயக்கப்படும் இந்த முகநூல் பக்கம், இணையவெளி மக்கள் இலவசமாக சட்ட ஆலோசனையைப் பெற உதவுவதில் பங்காற்றுகிறது.

இந்நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படும் இந்த விஷயத்தை ஒப்புக்கொண்ட மலேசிய தேசிய பல்கலைக் கழகம், UKM-இன் இஸ்லாமிய ஆய்வுப் புலத்தின் டக்வா மற்றும் தலைமைத்துவ ஆய்வு மையத்தின் விரிவுரையாளர், இணைப் பேராசிரியர் டாக்டர் ரொஸ்மாவாத்தி முஹமட் ராசிட், இணைய சூதாட்டத்திற்கு அடிமையாவது,  குடும்ப நல்லிணக்கம், குறிப்பாக மனநலம் மற்றும் நிதி அம்சங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டினார்.
 
சூதாட்டத்திற்கு அடிமையான நபர்கள், தங்கள் நடத்தையில் மாற்றம் ஏற்படும் வரையில் தொடர்ச்சியான இழப்புகளால் மன அழுத்தத்தை அடிக்கடி சந்திக்க நேரிடும்.

இந்நிலை நீடித்து, குடும்ப உறவுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி இறுதியில் விவாகரத்தில் முடிவதாக அவர் கூறினார்.

"குழந்தைகளின் உணர்ச்சிகளும் பாதிக்கப்படுகின்றன, அவர்கள் தங்கள் தாய் அல்லது தந்தையின் சூதாட்ட நடத்தை காரணமாக அவர்கள் மனச்சோர்வு, அவமானம் மற்றும் தாழ்வு மனப்பான்மையை எதிர்நோக்குகின்றார்கள். இப்பழக்கம் அவர்களுக்கும் சென்று சேர்ந்து பாதிக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது," என்று டாக்டர் ரொஸ்மாவாத்தி பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

இதனிடையே, விவாகரத்து, குடும்ப வன்முறை மற்றும் குழந்தை புறக்கணிப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் சூதாட்ட அடிமைத்தனம் வழிவகுக்கும் என்று மலேசியா புத்ரா பல்கலைக் கழகம், UPM-மின் மனித சூழலியல் புலத்தின் மனித வளர்ச்சி மற்றும் குடும்ப ஆய்வுத்துறை தலைவர், டாக்டர் ரொஜானா கஹார் கூறினார்.

சூதாட்ட அடிமைத்தனம் ஒரு நபரின் நிதி நிலையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

சிலர் தங்களுடைய சொந்தச் சேமிப்பைச் செலவழிக்கத் தயாராக இருப்பதோடு, நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கடன் வாங்குவதோடு, வட்டி முதலைகளிடமும் சிக்கி கொள்வதாக அவர் விவரித்தார்.

''அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு அவர்களைத் தள்ளுகிறது. இதன் விளைவாக, குடும்பத்தின் நல்வாழ்வு மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. குடும்பம், சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தையும் மோசமாக பாதிப்பதோடு நாட்டின் உற்பத்தித் திறனுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது,'' என்றார் அவர்.

இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி செப்டம்பர் 10-ஆம் தேதி வரையில்
சூதாட்ட நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக சமூக ஊடகங்களில் மொத்தம் 101,669 இடுகைகள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 92,342 இடுகைகள் அல்லது 91 விழுக்காடு வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், MCMC புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

மெட்டாவில் உள்ள இயங்குதளங்களான முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் இடுகைகள் அதிகமான வீழ்ச்சியை பதிவு செய்தன. அவை முறையே 97 விழுக்காடு மற்றும் 2 விழுக்காடு ஆகும், டெலிகிராம் ஒரு விழுக்காடு மட்டுமே.

சட்ட அமலாக்க நிறுவனமான அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம் மற்றும் இயங்குதள வழங்குநர்களின் ஒத்துழைப்பின் மூலம் தொடர்புடையை இணைய உள்ளடக்கத்தைக் கண்காணித்து, குறைப்பதன் மூலம், சூதாட்ட நடவடிக்கைகள் பரவுவது உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் அச்சுறுத்தலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க MCMC எப்போதும் கடப்பாடு கொண்டுள்ளது. 

பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதோடு, சூதாட்டத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு உள்ளடக்கத்திலும் ஈடுபடாமல் இருக்குமாறு அறிவுறுத்தும் MCMC, தொடர் நடவடிக்கைக்காக அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)