பொது

தொண்டு இல்ல விவகாரம்; 19 பேருக்கு தடுப்புக் காவல் உத்தரவு

19/09/2024 07:39 PM

ஷா ஆலம், 15 செப்டம்பர் (பெர்னாமா) -- மதத்தையும் சிறார்களையும் சுயநலத்திற்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாகத்தினர் உட்பட 19 பேருக்கு தடுப்புக் காவலை பெறும் பொருட்டு, அவர்கள் இன்று நண்பகல் ஷா ஆலம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

2001-ஆம் ஆண்டு சிறார்கள் சட்டம் செக்‌ஷன் 32 உட்பிரிவு a, 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்‌ஷன் 233 உட்பட, 2022-ஆம் ஆண்டு ஆள்கடத்தல் தடுப்பு மற்றும் குடியேற்ற எதிர்ப்பு கடத்தல் சட்டம் செக்‌ஷன் 14 ஆகியவற்றின் கீழ் விசாரணையை மேற்கொள்வதற்கு இந்தத் தடுப்புக் காவல் உத்தரவு விண்ணப்பிக்கப்பட்டது.

25-இல் இருந்து 65 வயதிற்குட்பட்ட அந்த அனைத்து சந்தேக நபர்களுக்கும் புதன்கிழமை வரை ஏழு நாள்களுக்கு, மஜிஸ்திரேட் நோரா நிசா ஙாரிடின் தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.

அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகி, அவரது மனைவி உட்பட 12 ஆடவர்களும் ஏழு பெண்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Op Global சோதனை நடவடிக்கையின் மூலம் G-I-S-B-H எனப்படும் Global Ikhwan Service and Business குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி, அவரது மனைவி மற்றும் அதன் உயர் பொறுப்பில் இருக்கும் சிலர், இன்று அதிகாலை, கைது செய்யப்பட்டதை அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் முன்னதாக உறுதிபடுத்தியது.

அவர்களில், Al-Arqam நிறுவன தோற்றுநரின் பிள்ளையும் அடங்குவதாக பி.டி.ஆர்.எம் கூறியது.

அதிகாலை மணி 5.40-க்கு புக்கிட் பிந்தாங் குடியிருப்புப் பகுதியில் உள்ள நான்கு வீடுகளில், புக்கிட் அமான் D8 பிரிவு, குற்றப்புலனாய்வுத் துறையின் D14 ஒருங்கிணைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு ஏகக்காலத்தில் அந்த அதிரடி சோதனையை மேற்கொண்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் கூறினார்.

இதனிடையே, நேற்று, கெடா, புக்கிட் காயூ ஹித்தாமில் கைது செய்யப்பட்ட GISBH தலைமை செயல்முறை அதிகாரியின் பிள்ளை உட்பட ஐவருக்கும் அதே நீதிமன்றத்தில் ஏழு நாள்களுக்கு தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)