சிறப்புச் செய்தி

2025 வரவு செலவுத் திட்டத்தில் வரிகள் குறித்த கணிப்புகள்

19/09/2024 08:30 PM

கோலாலம்பூர், 19 செப்டம்பர் (பெர்னாமா) -- 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியிருக்கின்றது.

இந்நிலையில், வரி அமலாக்கம் குறித்த கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் மக்கள் மத்தியில் அதிகமாகியுள்ளதை மறுப்பதற்கில்லை.

நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும் மற்றும் அமலுக்கு வரவிருக்கும் வரிகள் குறித்த தமது கணிப்பினை, இன்றைய வணிக உலகத்தில் பகிர்கின்றார் கணக்காளர் ரெங்கநாதன் கண்ணன்.

2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், மக்களின் சுமையைக் குறைக்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.

என்றாலும், வரியைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக ரெங்கநாதன் கண்ணன் கருதுகின்றார்.

எனினும், மக்களின் நல்வாழ்வினைக் கவனத்தில் கொண்டு வரி சுமைகளை குறைப்பதற்கான சலுகைகளை அரசாங்கம் வழங்கும் என்று தாம் நம்புவதாக அவர் விவரித்தார்.

''பொதுவாக வரி சலுகைகளைப் தனிநபர் நிவாரணம் என்றுக் கூறுவார்கள், குழந்தைகள் நிவாரணம், வாழ்க்கைத்துணை நிவாரணம், வரி கழிவு என்று இதுபோன்ற தனிநபர் நிவாரணங்கள் இருக்கும். இவை வரி சுமைகளை கட்டம் கட்டமாக குறைக்கும். சில நிவாரணங்களை நீட்டிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதோடு, மற்ற செலவுகளையும் உட்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது,'' என்றார் அவர்.

கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் luxury goods tax எனப்படும் ஆடம்பர பொருள் வரி ஆகியவற்றை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிமுகப்படுத்தி இருந்தார்.

அதனைச் இந்த வரவு செலுவுத் திட்டத்தில் செயல்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், முத்திரை வரியில் விகிதங்கள் சரிசெய்தல் அதிகரிப்பதற்கு சாத்தியங்கள் இருப்பதாகவும் ரெங்கநாதன் தெரிவித்தார்.

''கடந்த வாரம் வெளிநாட்டுகாரர்களுக்கு நிலையான முத்திரை வரியை அமல்படுத்தியிருந்தனர். மலேசியர்களுக்கு படிப்படியாக ஒரு விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடு வரை விகிதத்தை அதிகரிப்பார்கள். எனவே, முத்திரை வரியில் விகிதங்கள் சரிசெய்தல் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது,'' என்றார் அவர்.

இதனிடையே, இனிப்பு பானங்கள் மீது பரிந்துரைக்கப்படும் புதிய வரி, சில இனிப்பு
பான நிறுவனங்களின் உற்பத்திகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது குறித்து அவரிடம் வினவப்பட்டபோது, மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சீனிக்கான வரி அதிகரிப்படலாம் என்று விளக்கினார் ரெங்கநாதன்.

''மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சீனி வரியை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளும் உள்ளன. அவை அமல்படுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது,'' என்றார் அவர்.

2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் வரிகள் அமலாக்கம் குறித்து பெர்னாமா தொடர்புக் கொண்ட போது ரெங்கநாதன் தமது கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)