கோலாலம்பூர், 03 நவம்பர் (பெர்னாமா) -- மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம் UPNM-ம்மின் இராணுவ பயிற்சி கழகம், எ.எல்.கேவில் பயிற்சியில் உள்ள மாணவர், பகடிவதை மற்றும் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ் 16 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
பாதிக்கப்பட்டவரைப் பிடிக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சலவைப் பெட்டி தங்கள் தரப்பு பறிமுதல் செய்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
எனினும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த முழுமையான மருத்துவ அறிக்கை இன்னும் தமது தரப்புக்கு கிடைக்கவில்லை என்று டத்தோ ருஸ்டி கூறினார்.
வாக்குமூலம் அளித்த நபர்களில் புகாரளித்தவர், எ.எல்.கே பணியாளர், சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் காயங்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவ அதிகாரி ஆகியோர் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட அந்த 20 வயதுடைய மாணவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, குற்றவியல் சட்டம் செக்ஷன் 324-இன் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்படுவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் முன்னதாக தெரிவித்திருந்தார்.
கடந்த அக்டோபர் 22ஆம் தேதி இரவு 11.45 மணியளவில், UPNM மாணவர் தங்கும் விடுதியில், அந்த மாணவரை அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவரான 22 வயதுடைய சந்தேக நபர் தமது ஆடைகளை இஸ்திரி செய்து கொடுக்குமாறு கேட்டதோடு திடீரென சலவைப் பெட்டியைப் பாதிக்கப்பட்ட மாணவரின் நெஞ்சுப் பகுதியில் ஒருமுறை வைத்துள்ளார்.
சம்பவத்தின் போது மேலும் சில மூத்த மாணவர்களும் அறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)