பொது

YARL இடைநிலைப் பள்ளியில் RIMUP தீபாவளி கொண்டாட்டம்

08/11/2024 06:51 PM

கோலாலம்பூர், 08 நவம்பர் (பெர்னாமா) -- RIMUP எனப்படும் ஒற்றுமைக்கான மாணவர் ஒருங்கிணைப்புத் திட்டம் 1980இல் கல்வி அமைச்சால் தொடங்கப்பட்டது.

பல தரப்பட்ட கலாச்சார சமூகத்தில் ஆழமான புரிதலையும், ஒருங்கிணைப்பையும் ஊக்குவிப்பதற்காக ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு, தர்மன் இடைநிலைப் பள்ளி, சரஸ்வதி தமிழ்ப்பள்ளி, பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளி மாணவர்கள், இன்று அத்திட்டத்தின் வழியாக YARL இடைநிலைப் பள்ளியில் ஒன்றிணைந்து அதனைக் கொண்டாடினர்.

நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பல்லின மக்களின், குறிப்பாக இளைய தலைமுறையினரின் ஈடுபாடு முதன்மையானது.

மாணவர்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் அம்மூன்று பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மேளத்தாளத்துடன் வரவேற்று தொடக்கம் கண்டது.

இவ்வாறான வகையில், RIMUP தீபாவளி கொண்டாட்டம் வாயிலாக ஒருமைப்பாட்டிற்கு பங்காற்றியிருக்கும் தங்களது பள்ளி மிகவும் தனித்துவம் வாய்ந்தது என்று தலைமையாசிரியர் டாக்டர் அஹ்மத் கமால் பின் அரிஃபின் தெரிவித்தார்.

''பல்வேறு இனங்களைக் கொண்ட நமது மாணவர்களிடையே அன்பு, ஒன்றுப்படல், நல்லிணக்கம் ஆகிய பிணைப்பை வலுப்படுத்த வேண்டும். யார்ல் இடைநிலைப்பள்ளி மிகவும் தனித்துவமிக்கது. காரணம் இப்பள்ளியில், 40% மலாய்க்கார மாணவர்கள், 40% இந்திய மாணவர்கள் மற்றும் 20% சீன மாணவர்கள் பயில்கின்றனர். மேலும் இந்நிகழ்வு RIMUP திட்டத்தின் தொலைநோக்கு மற்றும் நோக்கத்தை அடைவதற்கான அடித்தளமாக அமையும், '' என்றார்.

இந்நிகழ்ச்சியின்போது, மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து அரங்கேற்றிய படைப்புகள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக யார்ல் இடைநிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் மெல்வின் சான் ஜொங் ஜாங் குறிப்பிட்டார்.

'' இந்த RIMUP தீபாவளி நிகழ்வில், மாணவர்களின் படைப்புகளைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. இந்தத் திட்டம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும், '' என்றார் அவர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னரே, அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டதாகவும், அதற்கு பள்ளி நிர்வாகத்தினர் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியதாக அப்பள்ளி ஆசிரியரும் RIMUP நிகழ்வின் ஏற்பாட்டாளருமான திருமதி திலகவதி பொன்னுசாமி கூறினார்.

''இது RIMUP தீபாவளி என்பதால், முடிந்தவரை ஆசிரியர்களும் மாணவர்களும் இந்திய பாரம்பரிய உடையில் வந்துள்ளனர். அதனால், அவர்களுமே மகிழ்ச்சி கொண்டுள்ளனர் '' என்றார் அவர்.

கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற கோலமிடுதல், கல்லாங்காய், பல்லாங்குழி விளையாட்டு, வாழ்த்து அட்டை தயாரிக்கும் போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

''இன்று நாங்கள், கலை மற்றும் காட்சி கல்வி கழகத் துறையப் பிரநிதித்து,கோலப்போட்டியில் கலந்து கொண்டோம்.அதில் நாங்கள் முதல் பரிசை வென்றோம். எங்களுக்கு அதில் மிகுந்த மகிழ்ச்சி. பிற பள்ளி மாணவர்களையும் எங்களோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன்வழி, நிறைய கற்றுக் கொண்டோம், '' என்று வெற்றி பெற்ற மாணவி ஒருவர் தமது மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்டார்.

பல்லின மாணவர்களும் இந்திய மாணவர்களுடன் இணைந்து ஆடல் பாடல் நிகழ்ச்சியிகளில் பங்கேற்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)