பொது

சயாம்-பர்மா மரண ரயில் பாதை கட்டுமானத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இறுதி நபரான ஆறுமுகம் காலமானார்...

09/11/2024 08:32 PM

கோலாலம்பூர், 09 நவம்பர் (பெர்னாமா) -- ஜப்பானியர்களின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் உருவான சயாம் - பர்மா மரண இரயில் பாதை வரலாற்று சம்பவத்தில், சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் பலியாகினர்.

அதில், பல துயரங்களை எதிர்நோக்கி அங்கிருந்து தப்பித்தவர்களில் பலர் நடைப்பயணமாக வந்து அன்று மலையகம் சேர்ந்தார்கள்.

அந்த உழைப்பாளி சமுகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் காலமான வேளையில், இறுதி நபராக இருந்த ஆறுமுகம் கந்தசாமி என்பவரும் வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.

அவருக்கு வயது 97.

1927-ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான், போர்டிக்சனில் பிறந்தவர் ஆறுமுகம் கந்தசாமி.

1942-ஆம் ஆண்டு சயாம் - பர்மா ரயில் பாதை அமைக்க சென்ற தமது அண்ணன் அருணகிரியைத் தேடி சென்றிருக்கிறார் ஆறுமுகம்.

அங்கு தொடங்கிய தமது வாழ்க்கை பயணத்தை ஆறுமுகம், தம்மோடு பகிர்ந்து கொண்டிருப்பதை பெர்னாமா செய்திகளிடம் நினைவுக் கூறுகின்றார் மலேசிய இந்திய சுங்கத் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி கே. பாலன்.

''அங்கு அவர் ஜப்பானிய மொழியை பேசியதை கண்டதும் ஜப்பானியர் அவருக்கு ஒரு மொழிப்பெயர்ப்பாளர் உத்தியோகத்தை கொடுத்து அங்கே வேலைக்கு அமர்த்திக் கொண்டதாக அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்,'' என்றார் கே. பாலன்.

அனைவருக்கும் எடுத்துக் காட்டாகவும், நற்பண்புகளை கொண்ட மாமனிதராகவும் திகழ்ந்த அவரின் மறைவு மனதிற்கு வருத்தம் அளிப்பதாக அவர் கூறினார்.

வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வந்த தமது தந்தை நேர்மை குணமுடையராக திகழ்ந்தார் என்று கூறுகின்றார் ஆறுமுகத்தின் இளைய மகன் சுதாகர் ஆறுமுகம்.

''இறுதி வரை முயற்சிக்க வேண்டும் என்ற அவரது எண்ணமும் தன்னம்பிக்கையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதே போன்று அவர் நேரம் தவறாமல் செயல்படுவது எங்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாக இருந்தது,'' என்றார் சுதாகர் ஆறுமுகம்.

13 பிள்ளைகளுக்கு தந்தையான ஆறுமுகத்திற்கு 38 பேரப்பிள்ளைகளும் 11 கொள்ளுப்பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

அன்னாரின் இறுதிச் சடங்கு நெகிரி, செம்பிலான் போர்டிக்சன் லிங்கியில் எண்.10 RUMAH MURAH LINGGI எனும் முகவரியில் காலை மணி 11 தொடங்கி பிற்பகல் 1 வரை நடைபெறும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)