உலகம்

மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

10/11/2024 08:01 PM

சென்னை, 10 நவம்பர் (பெர்னாமா) -- குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என்று தமிழ்த்திரையுலகில் இரண்டு தலைமுறைக்கும் மேலாக பல கதாப்பாத்திரங்களில் மிளிர்ந்து வந்த மூத்த நடிகர் டெல்லி கணேஷ் நேற்றிரவு காலமானார்.

முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் சில நாட்களாக பாதிக்கப்பட்டு வந்த 80 வயதுடைய டெல்லி கணேஷ், சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

1977ஆம் ஆண்டு இயக்குநர் கே. பாலசந்தரின் 'பட்டினப்பிரவேசம்' என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்திரையுலகில் அறிமுகமான டெல்லி கணேஷ், ரஜினிகாந்த், கமல் தொடங்கி தற்போதுள்ள பல நடிகர்களுடன் இணைந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படமே இவர் நடித்து திரையீடு கண்ட இறுதித் திரைப்படமாகும்.

தூத்துக்குடியில் பிறந்த இவர் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய பல மொழிகளில் நடித்திருந்தாலும், தமிழ்த் திரைப்படங்களே இவரின் அசாத்திய திறமையை வெளிப்படுத்தின.

குறிப்பாக, நாயகன் திரைப்படத்தில் 'ஐயர்' கதாப்பாத்திரம், அபூர்வ சகோதரர்கள் படத்தில் 'பிரான்சிஸ்' கதாபாத்திரம் என்று தொடங்கி சிந்து பைரவி, மைக்கேல் மதன காமராஜன், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி, தமிழன் என்று இவரின் அபார நடிப்பாற்றல் இன்று வரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

கணேசன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்தாலும், டெல்லியில் உள்ள தட்சிண பாரத நாடக சபாவுடன், இணைந்து பல நாடகங்களில் நடித்ததால் 'டெல்லி கணேஷ்' என்று அனைவராலும் இவர் அழைக்கப்பட்டார்.

சிறந்த நடிப்பு மட்டுமின்றி, சிறந்த பின்னணிக் குரல் கலைஞராகவும் திரைத்துறையில் இவர் பங்களித்துள்ளார்.

மேலும், சின்னத்திரைகளிலும் தமக்கென தனிமுத்திரைப் பதித்து வந்த டெல்லி கணேஷ், இதுவரை எட்டு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

1979ஆம் ஆண்டு 'பசி' திரைப்படத்திற்கு தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கணேஷின் உடல் திரைத்துறையினர் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)