குவெட்டா, 10 நவம்பர் (பெர்னாமா) -- தென்மேற்கு பாகிஸ்தான், குவெட்டாவில் உள்ள இரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
இச்சம்பவத்தினால் காயமடைந்தவர்கள் சிலர், சிகிச்சையின் போது உயிரிழந்ததையடுத்து மரண எண்ணிக்கை அதிகரித்ததாக போலீஸ் கூறியது.
62 பேர் காயமடைந்த வேளை, அவர்கள் அனைவரும் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இச்சம்பவத்தினால் உயிரிழந்த இராணுவ வீரர்கள், இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டனர்.
நேற்று அந்நாட்டின் உள்நாட்டு நேரப்படி காலை 8.20 மணிக்கு இரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலுக்கு, தடைசெய்யப்பட்டிருக்கும் பலுசிஸ்தான் விடுதலை இராணுவக் குழு பொறுப்பேற்றுள்ளது.
இதனிடையே, இரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, அங்குள்ள மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நம்பத்தகுந்த தரப்புகள் மூலம் அண்மைய நிலவரங்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தங்களின் வருகையைப் பதிந்து கொள்ளாத மலேசியர்கள் கீழ்கண்ட அகப்பக்கத்தில் பதிந்து கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், உதவி தேவைப்படும் மலேசியர்கள் கராச்சியில் உள்ள மலேசிய துணை தூதரகத்தையோ அல்லது திரையில் காணும் எண்ணையோ தொடர்புக் கொள்ளலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)