ஷா ஆலம், 10 நவம்பர் (பெர்னாமா) -- சபாவின் 17-வது மாநிலத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, சபா மக்கள் கூட்டணி கட்சி, ஜி.ஆர்.எஸ்-உடன் கலந்துரையாட சபா மாநில ஜனநாயக செயல் கட்சி, ஜ.செ.க-விற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
சபா மாநில ஜ.செ.க அம்மாநிலத்தின் அரசியல் சூழலையை நன்கு புரிந்து வைத்திருப்பதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொது செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
''சபா ஜ.செ.க கலந்துரையாடுகிறது. அவர்கள் முதலில் பேச்சுவார்த்தை மேற்கொள்ள நாங்கள் தளர்வும் சுதந்திரமும் அளித்துள்ளோம். ஏனெனில், மாநில சூழ்நிலை நிச்சயமாக சபா ஜ.செ.க-விற்கு நன்கு புரிந்திருக்கும். அவர்களும் மாநில அரசாங்கத்தில் உள்ளனர். நேற்றுதான் நான் சபா ஜ.செ.க தலைவருடன் லாபுவான் சென்றேன். சபாவின் அரசியல் வளர்ச்சிகள் குறித்து அவரும் எனக்கு விளக்கமளித்தார்,'' என்றார் அவர்.
இன்று, ஷா ஆலமில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில ஜ.செ.க மாநாட்டில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
சபா மாநிலத் தேர்தல் இவ்வாண்டு நவம்பர் தொடங்கி அடுத்தாண்டு அக்டோபர் மாதத்திற்குள் நடைபெறும் என்று அம்மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தெரிவித்ததாக ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டன.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]