நிபோங் திபால், 10 நவம்பர் (பெர்னாமா) -- பெஸ்டிநெட் நிறுவனத் தோற்றுநர் அமினுல் இஸ்மாயில் அப்துல் நோரையும் அவரின் நண்பர் ருஹுல் அமினையும் கைது செய்யுமாறு மலேசியாவிடம் வங்காளதேசம் விண்ணப்பித்துள்ளதை உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், அவர்களைக் கைது செய்வதற்கான விண்ணப்பம் நாடு கடத்துவதற்கா அல்லது மேல் விசாரணை மேற்கொள்ளவதற்கா என்பது குறித்து விரிவான விளக்கத்தை அளிக்குமாறு டாக்காவிடம் மலேசிய அரசாங்கம் கேட்டு கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
ஆவணத்தில் இடம்பெற்றிருப்பது போல புக்கிட் அமானிடம் டாக்கா கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, தேசிய போலீஸ் படை தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேனுடனும் தேசிய சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ அஹ்மட் தெர்ரிருடின் முஹமட் சாலேவுடனும் தாம் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டார்.
''கைது செய்யப்படுவதன் நோக்கம், நாடு கடத்தப்பட வேண்டும் என்பதா அல்லது அவர்களின் விசாரணை பரஸ்பர சட்ட உதவியுடனா என்று இரண்டு அம்சங்கள் உள்ளன. தற்போது, டாக்கா அதிகாரப்பூர்வத் தகவலை புக்கிட் அமானுக்கு அனுப்பி உள்ளதை என்னால் உறுதிப்படுத்த முடியும். நாம் அதுவரை காத்திருப்போம். அந்த நோக்கத்திற்கான அர்த்தத்தை டான் ஶ்ரீ ஐஜிபி, டாக்கா தரப்புடன் நிர்வகிப்பார் என்று நான் நம்புகிறேன்,'' என்றார் சைஃபுடின்.
கள்ளப்பண பரிமாற்றம், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் அந்நிய தொழிலாளர்கள் கடத்தல் போன்ற நடவடிக்கைகள் ஈடுபட்டதாகக் கூறி, அமினுல் இஸ்லாமையும் ருஹுலையும் மலேசியத் தரப்பு கைது செய்யுமாறு வங்காளதேச போலீஸ் வலியுறுத்தி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது தொடர்பில் பதிலளிக்கும்போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
மலேசிய அரசாங்கம் பயன்படுத்தும் FWCMS எனப்படும் வெளிநாட்டு தொழிலாளர்களின் அமைப்பை, பெஸ்டிநெட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)