பொது

பிணைப்பணம் கோரி வர்த்தகரை கடத்திய விவகாரம்; உடந்தையாக இருந்தாக இல்லத்தரசி மீது குற்றச்சாட்டு

10/11/2024 05:23 PM

ஜோகூர் பாரு, 10 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த மாதம், இரண்டு கோடி ரிங்கிட் பிணைப்பணத்தைக் கோரும் நோக்கில், வர்த்தகர் ஒருவரை கடத்தும் குற்றச்செயலில் உடந்தையாக இருந்ததாக இல்லத்தரசி ஒருவர் இன்று ஜோகூர் பாரு செஷன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

நீதிபதி ஹசீலியா முஹமட் முன்னிலையில் தம்மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட சான் வாய் கூய் அதைப் புரிந்ததாக தலையசைத்தார்.

எனினும், சம்பந்தப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் அவரிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இக்குற்றச்செயலைப் புரிய, உள்நாட்டைச் சேர்ந்த சிங் ஷி மிங் மற்றும் வியட்நாமைச் சேர்ந்த லுவாங் வான் டங், டிரான் வான் சுங் ஆகிய மூன்று ஆடவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக சான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 13ஆம் தேதி காலை மணி சுமார் 5-க்கு, ஜோகூர் பாருவில் உள்ள ஜாலான் ஸ்ட்ரெய்ட்ஸ் வியூவில் இரண்டு கோடி ரிங்கிட் பிணைப்பணத்தைக் கோரும் நோக்கத்துடன் அவர்கள் 59 வயதுடைய ஆடவரைக் கடத்தியுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்க வகை செய்யும் 1961ஆம் ஆண்டு கடத்தல் சட்டம், செக்‌ஷன் 3(1), அதனுடன் வாசிக்கப்பட்ட குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 109 ஆகியவற்றின் கீழ் அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்துள்ளனர்.

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் செவிமடுக்கப்படும் என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)