உலகம்

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவு

10/11/2024 07:58 PM

சென்னை, 10 நவம்பர் (பெர்னாமா) -- தமது அபாரமான எழுத்தாற்றல் மூலம் தமக்கென ஒரு வாசகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், இன்று தமது 65ஆவது வயதில் காலமானார்.

பெரும்பாலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், மர்மக் கதைகள், மறுபிறப்பு, திகில் போன்றவற்றை கதைக் கருவாகக் கொண்ட இவரின் படைப்புகள் மக்களிடையே பிரசித்திப் பெற்றவையாகும்.

அவரின் மறைவு எழுத்துத் துறைக்கும் தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாகும்.

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் சேலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

அவரது இயற்பெயர் சௌந்தர்ராஜன். 

பொறியாளராகப் பணியாற்றிய அவர், எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் இத்துறையில் ஈடுபடும்போது, தமது தாயாரின் பெயரான 'இந்திரா'-வையும் தமது பெயரில் இணைத்துக் கொண்டார்.

எழுத்துத்துறையில் இந்திரா சௌந்திரராஜன் என்ற பெயர் பின்னர் எழுத்துத்துறையில் மறுக்க முடியாத ஒரு பெயராக உருவெடுத்தது.

இவர், இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த எழுத்தாளர் விருதினையும், இன்னும் பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

இவரது கதை வசனத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிருங்காரம் எனும் திரைப்படம் தேசிய விருதினையும் வென்றுள்ளது.

அவரது படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வந்துள்ளன. 

அவற்றில், என் பெயர் ரங்கநாயகி, மர்ம தேசம், ருத்ர வீ ணை போன்றவை அடங்கும்.
 
மேலும் இவர் ஆனந்தபுரத்து வீடு, இருட்டு உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கும் கதை எழுதியுள்ளார்.

இவர், நேற்று மதுரையில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நவம்பர் 13 ஆம் தேதி தமது 66ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்த இவரின் திடீர் மறைவு எழுத்துலகிலும் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)