கெய்ரோ, 11 நவம்பர் (பெர்னாமா) -- இரு தரப்பு உறவை எதிர்காலத்தில் விவேக பங்காளித்துவ நிலைக்கு உயர்த்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க மலேசியாவும் எகிப்தும் ஒப்புக் கொண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பரஸ்பர நலன்கள் மற்றும் அக்கறை சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு நாடுகளும் கடப்பாடு கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நோக்கத்தை அடைவதற்காக கூட்டு ஆணைய மற்றும் இரு தரப்பு ஆலோசனைக் கூட்டத்தை வரும் 2025ஆம் ஆண்டு மலேசியா ஏற்று நடத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
அல்-இத்தியாடியா அரண்மனையில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிபர் அப்டில் ஃபாத்தா எல்.சிஸிசியுடன் இணைந்து நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
வர்த்தகம், முதலீடு, உயர்கல்வி, கலாசாரம், தற்காப்பு மற்றும் பாதுகாப்பு,வேளான் மூலப்பொருள் மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த தாமும் எகிப்திய அதிபரும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், இலக்கவியல் பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, போக்குவரத்து, கடல்சார் வர்த்தகம், உற்பத்தி மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் தங்களுக்குள்ள ஆற்றலைப் பகிர்ந்து கொள்ளவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன என்று அன்வார் குறிப்பிட்டார்.
ஆசியான் அமைப்பின் தலைவராக அடுத்தாண்டு மலேசியா பொறுப்பேற்கவுள்ள நிலையில் ஆசியான்-எகிப்து உறவை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக அந்நாட்டுடன் இணைந்து செயல்பட மலேசியா தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)