பொது

இயல்பைக் காட்டிலும் கூடுதல் விழிப்புடன் இருக்கும் மனித மூளை; அறிகுறிகளும் சிகிச்சை முறையும்

13/11/2024 05:59 PM

கோலாலம்பூர், 13 நவம்பர் (பெர்னாமா) --   COGNITIVE HYPERAROUSAL.

அதாவது, இயல்பு நிலையைக் காட்டிலும் கூடுதல் விழிப்புடனும், எச்சரிக்கை நிலையிலும் இருக்கும் மனித மூளை.

இதற்கு, Post Traumatic Stress Disorder, PTSD எனப்படும் திடீர் அசம்பாவித சம்பவங்களுக்கு பிறகு, ஒருவருக்கு ஏற்படும் தாக்கமே முதன்மை காரணமாகிறது.

உலக மக்கள் தொகையில் சுமார் 25 கோடி பேர் இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த மேலும் விரிவான விளக்கங்களைக் கொண்டு வருகின்றது இவ்வார 'நலம் வாழ' சுகாதார அங்கம்.

சாலை விபத்து, இயற்கை பேரிடர், திடீர் இழப்பு, பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை போன்ற அசம்பாவிதங்களால் உண்டாகும் தாக்கத்தின் நீட்டிப்பே ஒருவர் பி.தி.எஸ்.டி-யால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றார் மனநல ஆலோசக நிபுணர் டாக்டர் அருணகிரி முத்துக்கிருஷ்ணன்.

''ஒருவர் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கி அவருடன் பயணித்த மற்றவர்கள் உயிரிழந்து இவர் மட்டும் உயிர் தப்பும்போதும், திடீர் வெள்ளம், எரிமலை போன்ற இயற்கை பேரிடர்களை திடீரென எதிர்கொள்பவர்கள் போன்றோருக்கு பி.தி.எஸ்.டி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்கு மேலாகவும் இந்தத் தாக்கம் தொடர்ந்தால் அது பி.தி.எஸ்.டி என்பது உறுதி,'' என்றார் அவர்.

Cognitive Hyperarousal தாக்கம் ஏற்படுவதற்கு பி.தி.எஸ்.டி முதன்மை காரணமாக அமைந்தாலும், ஒருவருக்கு ஏற்படும் தூக்கமின்மையும் அதற்கு பங்களிப்பதாக டாக்டர் அருணகிரி விளக்கினார்.

அதோடு, Cognitive Hyperarousal-ஆல் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் காணப்படும் அறிகுறிகள் அல்லது அவர்களின் நடவடிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அவர் இவ்வாறு விவரித்தார்.

''நடந்த சம்பவத்தையே மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். பல விஷயங்களைத் தவிர்ப்பார்கள். உதாரணத்திற்கு, சாலை விபத்தை எதிர்நோக்கியிருந்தால் மீண்டும் சாலை பயணிக்க அச்சம் கொள்வார்கள். அதிகமான எதிர்மறை எண்ணங்கள் தோன்றி தற்கொலைக்குக்கூட முயற்சிப்பார்கள்,'' என்றார் அவர்.

அதுமட்டுமின்றி, கட்டுப்படுத்தப்படுத்த முடியாத கோபம் உண்டாவது ஒரு விஷயத்தில் கூர்ந்து கவனம் செலுத்த முடியாத நிலையும் அதில் அடங்கும்.

இச்சூழலில், அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகள் அல்லது சிகிச்சை முறைகள் குறித்தும் அவர் டாக்டர் அருணகிரி தெளிவுபடுத்தினார்.

''Cognitive behavioural சிகிச்சை, சி.பி.தி, Exposure சிகிச்சை, கண் இயக்கம் தேய்மானம் மற்றும் மறு செயலாக்க சிகிச்சை, இ.எம்.டி.ஆர் போன்ற சிகிச்சை முறைகள் உள்ளன. மருந்து, மாத்திரைகளின் மூலமும் இதனை முற்றாக குணப்படுத்த முடியாவிடினும் அதன் தாக்கத்தை ஓரளவு நிச்சயம் குறைக்கலாம்,'' என்றார் அவர்.

எனவே, இதுபோன்ற அறிகுறிகள் நமக்கோ அல்லது நம்மைச் சுற்றியுள்ளர்வர்களிடமோ தென்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுமாறும் டாக்டர் அருணகிரி அறிவுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)