ஷா ஆலாம், 14 நவம்பர் (பெர்னாமா) -- இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை சிறார் சித்திரவதை தொடர்பில் 387 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறார்களில் 139 பேர் ஒரு வயதுக்கும் குறைவானவர்களாகவும் 96 பேர் இரண்டு முதல் ஐந்து வயது வரையிலானவர்களாகவும் எஞ்சியோர் 18 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள் என்று அவர் விவரித்தார்.
சிறார் பராமரிப்பு மைய நடத்துநர்களே இத்தகைய குற்றங்களுக்கு முதன்மை காரணமாக உள்ள வேளையில், அதற்கு அடுத்த நிலையில் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் வளர்ப்பு பெற்றோர் ஆகியோர் உள்ளதாக அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநிலக் போலீஸ் தலைமையக குற்றப்புலனாய்வுத் துறையின், சிறார் பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் விசாரணைப் பிரிவின் இரண்டாவது நேர்காணல் மையத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அதனைத் தெரிவித்தார்.
பெரும்பாலான சிறார் துன்புறுத்தல் சம்பவங்கள், குழந்தைகள் அல்லது சிறார்களைத் தனியாக விடுவது போன்ற அக்கறையின்மைச் செயல்களாலும் ஏற்படுவதை டத்தோ ஹூசேன் ஓமார் மறுக்கவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)