புது டெல்லி, 15 நவம்பர் (பெர்னாமா) -- இந்தியாவில் குளிர்காலம் தொடங்கியிருக்கும் நிலையில் காற்றுத் தூய்மைக்கேடு அபாயகரமான அளவை எட்டியதால் தலைநகர் புது டெல்லியில் ஆரம்பப் பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் நீடிக்கும், திறந்தவெளி எரிப்பு போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளின் மாசுப்பாடு ஆகியவை அங்கு காற்றின் தரத்தில் நச்சுத்தன்மை கலந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புது டெல்லியின் காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை 430-ஐ தாண்டியுள்ளது.
இது மனித ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல மடங்கு மோசமானதாகும்.
காற்றுத் தூய்மைக்கேடு இன்னும் அதிகமாகி வரும் நிலையில், அடுத்த அறிவிப்பு வரும் வரையில் டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் தங்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை இயங்கலை வழியாக மேற்கொள்ள வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் அட்டிஷி மர்லெனா X-இல் பதிவிட்டுள்ளார்.
பட்டாசுக்குத் தடையும் கட்டுமான நடவடிக்கைகளுக்கு வரம்புகளும் இருந்தபோதிலும் நகரின் காற்றின் தரம் இம்மாதம் மோசமடைந்துள்ளது.
இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பலர் பட்டாசு தடையையும் மீறி, அதனை வெடித்ததால் மேலும் புகை மூட்டத்தை அதிகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]