பொது

11-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு தொடங்கியது

15/11/2024 08:25 PM

கோலாலம்பூர், 15 நவம்பர் (பெர்னாமா) -- உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பொருளாதார ரீதியில் தங்களது வர்த்தகத்தை விரிவுப்படுத்திக் கொள்ளும் ஒரு தளமாக உலகத் தமிழர் பொருளாதார மாநாடு விளங்குகிறது.

இம்முறை 11-ஆவது முறையாக நடைபெறும் இம்மாநாடு இன்று கோலாலம்பூர் KLCC மாநாட்டு மையத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

ஒவ்வோர் ஆண்டும் உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து புகழ்பெற்ற வணிகத் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள், பிரமுகர்கள் உட்பட கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர்.

இம்முறையும் அவர்கள் வர்த்தகத்தில் உள்ள திட்டங்களையும் வாய்ப்புகளையும் அறிந்துக் கொண்டு பொருளாதார துறையில் வளர்ச்சியை நோக்கி பயணிப்பார்கள் என்று உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் தலைவர் டாக்டர் வி. ஆர். எஸ் சம்பத் நம்பிக்கை தெரிவித்தார்.

''இதன் நோக்கமே தமிழர்கள் உயர்ந்தவர்கள், சிறப்பானவர்கள், அறிவு கூர்மையானவர்கள், அந்தஸ்த்து உடையவர்கள். மிகப் பெரிய இடத்தில் இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்பதற்காகதான் இங்கே ஏற்பாடு செய்திருக்கின்றோம். இந்த மாநாட்டிற்கு வியாபாரிகள், வணிகர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் என்று அனைவரும் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த மாநாட்டை செய்கிறோம்,'' என்றார் டாக்டர் வி. ஆர். எஸ் சம்பத்.

உலக நாடுகளில் உள்ள தமிழ் வர்த்தகர்கள் இடையிலான வணிக உறவை வளர்ப்பதற்கு இம்மாநாடு முக்கிய பங்கு வகிக்கும் என்று மாநாட்டு வரவேற்பு செயற்குழுத் தலைவர் டத்தோ ப. சகாதேவன் கூறினார்.

அதோடு, வர்த்தகத்தில் ஆர்வம் செலுத்தும் இளைஞர்களும் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேசிய நில நிதி கூட்டுறவு கழகத்தின் நிர்வாக இயக்குநருமான அவர் தெரிவித்தார்.

''வணிக உறவுகளை உருவாக்குவதுதான் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். பல நாடுகளில் இருந்து தமிழ் வர்த்தகர்கள் வருகின்றனர். அவர்களுடன் வணிக உறவை வைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மலேசியாவை பொறுத்தவரை புதிய தொழில்நுட்பங்களை இளைஞர்கள் கற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும்,'' என்றார் ப. சகாதேவன்.

இதனிடையே, வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் இந்த மாநாடு குறித்து தங்கள் கருத்துகளை பெர்னாமாவிடம் தெரிவித்தனர்.

சில வர்த்தகர்களுக்கு வெளிநாட்டிற்கு பயணிப்பதில் சிக்கல் இருக்கும். அவர்களுக்கு இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக இருக்கும். பல்வேறு வர்த்தகங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள முடியும். அனைத்து வர்த்தக துறையைச் சார்ந்தவர்களுக்கும் நல்ல ஒரு வாய்ப்பு. இதனை முக்கியமான மாநாடாக கருதுகிறோம்,'' என்றனர்.

பெண் வர்த்தகர்களும் வணிகத் துறையிலும் இது போன்ற மாநாடுகளிலும் ஆர்வம் செலுத்த வேண்டும் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் ஞாயிறு நவம்பர் 17-ஆம் தேதி வரையில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு மலேசியா, இந்தியா உட்பட இதர நாடுகளில் 300-க்கும் அதிகமான பேராளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கிய மாநாட்டில் மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டி கலந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)