உலகம்

உத்தரபிரதேச மருத்துவமனையில் தீ; 10 குழந்தைகள் பலி

16/11/2024 05:55 PM

உத்தரபிரதேசம், 16 நவம்பர் (பெர்னாமா) --   வட இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 குழந்தைகள் உயிரிழந்ததாக அனடோலு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள ஜான்சி மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

அப்பிரிவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகள்அனுமதிக்கப்பட்டிருந்தன.

இதில், 10 குழந்தைகள் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், எஞ்சிய குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

மின் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று மாநில துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் தெரிவித்தார்.

''புதிதாக பிறந்த பத்து குழந்தைகள் இறந்துவிட்டன. அதில் ஏழு குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மூன்று குழந்தைகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மரபணு சோதனை நடத்தப்படும். தேவைப்படும் நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களது அரசாங்கம் உறுதுணையாக இருக்கும். சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம்'', என்று அவர் கூறினார்.

பலியான 3 குழந்தைகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

தீ விபத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குப் பின்னர் காயமடைந்த பலர் சிகிச்சைப் பெற்று வருவதாக பிரஜேஷ் பதக் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)