பாகிஸ்தான், 16 நவம்பர் (பெர்னாமா) -- பாகிஸ்தானில் மக்கள் தொகை அதிகம் கொண்ட இரண்டு முதன்மை நகரங்களில் சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதிகளை நச்சுத்தன்மைக் கொண்ட புகைமூட்டம் தொடர்ந்து சூழ்ந்து வருவதால் அங்கு வாரத்தில் மூன்று நாட்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மோசமான புகைமூட்டத்தினால் மருத்துவமனைகள் எப்போதும் தயார்நிலையில் இருக்கின்றன.
சிகிச்சையகங்கள் செயல்படும் நேரமும் சில மணி நேரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
லாகூர் மற்றும் முல்தான் போன்ற நகரங்களில் சுகாதாரப் பணியாளர்கள் கூடுதல் நேரம் பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளன.
பஞ்சாப் வட்டாரத்தில் உள்ள இரண்டு நகரங்களைச் சேர்ந்த ஒரு கோடியே 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நச்சுத்தன்மைக் கொண்ட புகைமூட்டத்தினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இதனால், அந்நகரங்களில் ஒவ்வொரு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
அக்காலக்கட்டத்தில், சுகாதார அவசர தேவையைத் தவிர்த்து எந்தவொரு வெளிநடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை தவிர்த்து இந்திய தலைநகரம் புது டெல்லி, வங்காளதேச தலைநகரம் டாக்கா உட்பட இதர சில தெற்காசிய நாடுகளும் காற்றுத் தூய்மைக்கேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன.
புது டெல்லியில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றல் நடவடிக்கை மேற்கொள்ளவும் அந்நகரம் முழுவதிலும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)