நைரோபி, 17 நவம்பர் (பெர்னாமா) -- குறைந்தபட்ச கட்டணத்துடன் நீண்டதூர பயணத்தை வழங்கும், AAX எனப்படும் ஏர்ஆசியா X நிறுவனம், இம்மாதம் 15ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து கென்யா, நைரோபிக்கு தனது முதல் நேரடி பயணத்தைத் தொடங்கியது.
சுமார் 90 விழுக்காடு பயணிகளைக் கொண்டு கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு அதன் முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
வாரத்தில் நான்கு நாட்கள் கோலாலம்பூரிலிருந்து நைரோபிக்குச் செல்லும் இந்த AAX விமானங்கள், தற்போது மலேசியா மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் ஒரே நேரடி விமானமாகும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி பெஞ்சமின் இஸ்மாயில் கூறினார்.
90 விழுக்காடு எடை என்பது சுமார் 278 பயணிகளை உள்ளடக்கியது என்றும் அவர் விளக்கினார்.
அதே வேளையில், நைரோபியிலிருந்து கோலாலம்பூருக்குத் திரும்பும் விமானத்தில் ஏறக்குறைய 75 விழுக்காட்டு பயணிகள் பயணித்ததாக அவர் தெரிவித்தார்.
"கோலாலம்பூரிலிருந்து நைரோபி செல்லும் பயணிகளின் விபரங்களைக் கொண்டு உங்களால் சில அம்சங்களைக் காண முடியும். ஏர் ஆசியா அமைப்பின் காரணமாகவே நாங்கள் ஆஸ்திரேலியர்களை அழைத்து வருகிறோம். அந்த விமானத்தில் ஆஸ்திரேலியர்கள் குழு மெல்போனிற்கு வந்துள்ளனர். அதோடு, சீனர்கள், மலேசியர்கள் மற்றும் கென்யர்களும் இருக்கின்றனர். வழக்கமாக அவர்கள் இங்கு வருவதற்கு 20 மணிநேரங்கள் ஆகும், " என்றார் அவர்.
ஒவ்வொரு பயணத்திலும் அதன் எடை 85 விழுக்காட்டைக் கொண்டிருந்தால் அந்த வழியில் ஆண்டுதோறும் 156,000க்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்டு செல்வதற்கான இலக்கை அடைய முடியும் என்று தாம் நம்புவதாக பெஞ்சமின் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)