புத்ராஜெயா, 17 நவம்பர் (பெர்னாமா) -- வெற்றியடைந்தவர்கள் அல்லது அதிகமான சொத்துடைமைக் கொண்டவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது, நிதிக் கையிருப்பிற்கு ஏற்பவே தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்காதது ஆகிய குணங்கள் ஊழல் போன்ற முறைக்கேடான செயல்களில் பொதுச் சேவைத்துறையினரை ஈடுபடுத்துவதற்கு ஊக்குவிக்கின்றன.
இத்தகைய அம்சங்கள் வாழ்க்கைச் செலவின அதிகரிப்புடன் தொடர்புடையது என்றாலும் பொது சேவை துறை ஊழியர்கள் மறைமுகமாக தங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான குறுக்குவழிகளைக் கண்டறிவதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தெரிவித்தார்.
"அந்த அமைப்பில் இருந்துவாறு நாம் ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகையில் கையூட்டு நடக்கிறது. நமது மேசைக்கு அருகில் இருப்பவர் விலை உயர்ந்த கைத்தொலைப்பேசியை வைத்திருந்தால் நாமும் அதை வாங்க வேண்டுமென்று ஆசைப்படுவோம். இதிலிருந்து கையூட்டு தொடங்குகிறது. வருமானத்திற்கு மேல் நமது தேவை அதிகரிக்கும் போது அங்கு கையூட்டுப் பழக்கம் தொடங்குகிறது", என்று அவர் கூறினார்.
நவம்பர் 19ஆம் தேதியோடு, நாட்டின் 16ஆவது அரசாங்கத் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்று நூறு நாட்கள் நிறைவடைவதை முன்னிட்டு பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்பு நேர்க்காணலில் டான் ஶ்ரீ ஷம்சுல் அவ்வாறு கூறினார்.
இந்நிலையில், பொது சேவை துறையில் ஊழலையும் தவறான நடவடிக்கைகளையும் கையாளும் அணுகுமுறைகள் போதனைகளின் வழி அதிகரிக்கப்பட வேண்டும்.
மாறாக, தண்டனைகள் அடிப்படையில் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)