உலகம்

வங்காளதேசம்: ஷேக் ஹசினாவை ஒப்படைக்கும்படி இந்தியாவிடம் கோரப்படும்

18/11/2024 02:01 PM

டாக்கா, 18 நவம்பர் (பெர்னாமா) -- அடைக்கலம் நாடி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவைத் திருப்பி அனுப்பும்படி அந்நாட்டு அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்யப்படவுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, உயிரிழப்பு ஏற்பட்டதற்கு ஷேக் ஹசினாவே காரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரை ஒப்படைக்க இந்தியாவிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று இடைக்காலத் தலைவர் முஹமாட் யூனுஸ் தெரிவித்திருக்கிறார்.

'' ஒவ்வொரு கொலைக்கும் நீதியை உறுதி செய்ய வேண்டும். ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நிகழ்ந்த கொலைகளுக்கு நீதி கிடைக்க நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளும் சிறப்பான நிலையில் உள்ளன. வீழ்ந்த சர்வாதிகாரி ஷேக் ஹசீனாவை இந்தியாவிலிருந்து திரும்பக் கோருவோம், '' என்று உறுதி பூண்டார் அவர்.

இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டு 100 நாட்கள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து முஹமாட் யூனுஸ் தொலைகாட்சியின் வழி அந்நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

ஹசீனா ஆட்சியில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து துல்லியமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

கடந்த சில மாதங்களாக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தினால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

தற்போது வரை அவரிடம் புகலிடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)