கோலாலம்பூர், 19 நவம்பர் (பெர்னாமா) - உணவின் விலை உயர்த்தப்படும் என்று முன்னதாக வெளியிடப்பட்ட அறிவிப்பை ஜோகூர் மாநில இந்திய முஸ்லிம் தொழில்முனைவோர் சங்கம் மீட்டுக் கொண்டுள்ளது.
மேலும், தனது சங்கத்தின் கீழ் செயல்படும் உணவகங்களில் உணவு விலை உயர்த்தப்படாது என்று சங்கத்ம் உறுதியளித்துள்ளதாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமாட் அலி தெரிவித்தார்.
"எனவே, எந்தவொரு அறிக்கையிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது, அரசாங்க ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவது போன்ற அரசாங்கத்தின் அறிவிப்பை சில தரப்பினர் சாதகமாக்கிக் கொள்வதை நாங்கள் விரும்பவில்லை," என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அர்மிசான் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, எந்தவொரு விலை உயர்வும் நேரடி செலவுகளை உட்படுத்தியதாக இருக்க வேண்டுமே தவிர, சுயமாக விலை உயர்வு அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என்று அர்மிசான் தெரிவித்தார்.
விலை உயர்வு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து அமைச்சு முழுமையான விளக்கம் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)