உலகம்

உலக வங்கியில் அனைத்துலக மேம்பாட்டு சங்கத்திற்கு  400 கோடி அமெரிக்க டாலர் வழங்கப்படும்

19/11/2024 05:09 PM

ரியோ டி ஜெனிரோ, 19 நவம்பர் (பெர்னாமா) - ஏழை நாடுகளுக்கு உதவும் பொருட்டு, உலக வங்கியில் அனைத்துலக மேம்பாட்டு சங்கத்திற்கு  400 கோடி அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் உறுதியளித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபராக ஜி20 மாநாட்டில் கடைசியாக கலந்து கொள்ளும் பைடன், இந்த உதவி நிதி ஏழை நாடுகளுக்கு பயன் அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

"அடுத்த மூன்று ஆண்டுகளில் உலக வங்கியின் அனைத்துலக மேம்பாட்டுச் சங்கத்திற்கு (ஐ.டி.ஏ) அமெரிக்கா 400 கோடி அமெரிக்க டாலரை வழங்க உறுதியளிக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். எனது நண்பர் அஜய் உங்களிடம் கூறுவது போல்: உலகின் ஏழ்மையான நாடுகளுக்கு ஐடிஏ முதலில் உதவி வழங்குகிறது. சுற்றியுள்ள அனைவரையும் அவர்களின் பங்களிப்பை டிசம்பரில் அதிகரிக்க  நான் ஊக்குவிக்கிறேன்," என்றார் அவர்.

ஜி20 அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்ட உச்சநிலை மாநாட்டில் பைடன் அவ்வாறு கூறினார்.

2021-ஆம் ஆண்டில் அனைத்துலக மேம்பாட்டு சங்கத்திற்கு அமெரிக்கா 350 கோடி அமெரிக்க டாலர் உதவி நிதி வழங்கியிருந்தது.

உக்ரேன், காசா மற்றும் சூடானில் உள்ள போர்களுக்கு தீர்வுக் காண்பதுடன் ஏழை நாடுகளில் அதிகரிக்கும் உணவு பற்றாக்குறை பிரச்சினைகளைக் களைவதிலும் ஜி20 நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று பைடன் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)