புத்ராஜெயா, மார்ச் 07 - நிர்வகிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சிறந்த அணுகுமுறையை உறுதிச் செய்வதற்காக நடப்பிலுள்ள நிர்வாக கட்டமைப்பில் எழும் பிரச்சனைகளைக் கையாள்வதில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்கள் தொடர்பான நிர்வாகத்தை அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தும்.
நேற்று, தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் மற்றும் மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் மர்ஹமா ரோஸ்லி தலைமையேற்ற இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் பிரச்சனை தொடர்பான நல்லிணக்கம் மற்றும் நிர்வகிப்பு கூட்டத்தில் அவ்விவகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
வழிபாட்டு தலங்களின் நிர்வகிப்பு, கட்டுமான செயல்முறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து அக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
மத்திய அளவில், இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்குத் தொடர்புடைய நிதிகளைக் கண்காணித்து ஒருங்கிணைக்கும் செயல்முறையில் RIBI எனப்படும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான நிதி ஒருங்கிணைப்புப் பிரிவு உட்பட அதன் முக்கிய விவகாரங்களைக் கையாள்வதில் வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு, கே.பி.கே.டி முக்கிய பங்கு வகிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பில், கே.பி.கே.டி வெளியிட்ட வழிபாட்டுத் தலங்களின் சரிபார்ப்பு மற்றும் நிர்வகிப்புக் குறித்த வழிகாட்டுதல்களை அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்று அந்த அறிக்கையின் மூலம் யுனேஸ்வரனும், மர்ஹமா ரோஸ்லியும் கேட்டுக் கொண்டனர்.
1976ஆம் ஆண்டு ஊராட்சித்துறை சட்டம், சட்டம் 171, 1974ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டம், சட்டம் 133, 1976ஆம் ஆண்டு நகர மற்றும் கிராமத் திட்டமிடல் சட்டம், சட்டம் 172 உள்ளிட்ட நடப்பிலுள்ள சட்ட விதிகளின் அடிப்படையில் இவ்விவகாராம் அமைத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சட்டங்கள் ஊராட்சித்துறை அதிகாரிகளுக்கு கட்டிட கட்டமைப்புகளைக் கண்காணிக்கவும் தங்களின் நிர்வகிப்பின் கீழ் உள்ள பகுதிகளில் அனுமதியின்றி எந்த வழிபாட்டுத் தலங்களும் கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் அதிகாரம் அளிக்கிறது.
இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மதங்களைச் சேர்ந்த இந்து, கிறிஸ்தவ, பௌத்த, Tao, சீக்கிய மற்றும் பஹாய் சமூகங்களைச் சேர்ந்த வழிபாட்டுத் தலங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)